32 கேஸ் சிலிண்டர்கள் திருட்டு: லோடு ஆட்டோவுடன் 2 வாலிபர்கள் கைது!

32 கேஸ் சிலிண்டர்கள் திருட்டு: லோடு ஆட்டோவுடன் 2 வாலிபர்கள் கைது!

ஸ்ரீவைகுண்டம் அருகே சமையல் எரிவாயு குடோனின் பூட்டை உடைத்து 32 சமையல் எரிவாயு சிலிண்டர்கள் மற்றும் லோடு ஆட்டோவை திருடிச் சென்ற வழக்கில் 2 வாலிபர்களை முறப்பநாடு காவல்துறையினர் கைது செய்தனர்.

பாளையங்கோட்டை அண்ணா நகரைச் சேர்ந்த ஜோதி பாபு சமையல் எரிவாயு விநியோகஸ்தராக உள்ளார். இவருக்குச் சொந்தமான சிலிண்டர் கிடங்கு, வல்லநாடு அருகே கோனார்குளம் கிராமத்தில் அமைந்துள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு இரவு நேரத்தில் மர்ம நபர்கள் கிடங்கின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்துள்ளனர். அங்கு வைக்கப்பட்டிருந்த 32 சமையல் எரிவாயு சிலிண்டர்களை திருடியதுடன், கிடங்கு அருகே நிறுத்தப்பட்டிருந்த லோடு ஆட்டோவையும் எடுத்துச் சென்று தப்பியுள்ளனர்.

இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில் முறப்பநாடு காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் லூர்து சேவியர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டார்.

விசாரணையில், வல்லநாட்டைச் சேர்ந்த சந்திரன் மகன் சின்னதுரை மற்றும் கைலாசம் மகன் மணிமந்திரம் ஆகிய இருவரும் சிலிண்டர்கள் மற்றும் லோடு ஆட்டோவை திருடிச் சென்றது தெரியவந்தது.

இதையடுத்து இருவரையும் முறப்பநாடு காவல்துறையினர் கைது செய்தனர். மேலும், அவர்களிடமிருந்து திருடப்பட்ட லோடு ஆட்டோ மற்றும் 32 சமையல் எரிவாயு சிலிண்டர்களையும் பறிமுதல் செய்து மீட்டனர்.