தூத்துக்குடியில் விதிமீறி சரக்கு ஏற்றிச் சென்ற ராஜஸ்தான் லாரிகள் சிறைபிடிப்பு! – உள்ளூர் லாரி உரிமையாளர்கள் அதிரடி

தூத்துக்குடியில் விதிமீறி சரக்கு ஏற்றிச் சென்ற ராஜஸ்தான் லாரிகள் சிறைபிடிப்பு! – உள்ளூர் லாரி உரிமையாளர்கள் அதிரடி

தூத்துக்குடி: உள்ளூர் லாரி உரிமையாளர்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் வகையில், விதிகளை மீறி சரக்குகளை ஏற்றிச் சென்றதாகக் கூறி ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த 4 டிரெய்லர் லாரிகளை தூத்துக்குடி லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் சிறைபிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் பகுதியில் மின்கோபுரம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிக்கான ஒப்பந்தத்தை ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர் எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இதற்கிடையே, கயத்தாறு பகுதியில் இருந்து கிரேன் உள்ளிட்ட கனரக இயந்திரங்கள் மற்றும் கட்டுமானப் பொருட்களை ஓட்டப்பிடாரம் பகுதிக்கு கொண்டு செல்வதற்காக ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த டிரெய்லர் லாரிகள் பயன்படுத்தப்படுவதாக தூத்துக்குடி லாரி உரிமையாளர்கள் சங்கத்தினருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் மற்றும் 'ஈ-வாகன்' சேவை அமைப்பினர் இணைந்து கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது தூத்துக்குடி மடத்தூர் அருகே வந்த ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த 4 டிரெய்லர் லாரிகளை தடுத்து நிறுத்தி சிறைபிடித்தனர்.

லாரிகளை இயக்கிய ஓட்டுநர்களிடம், தமிழகத்திற்குள் ஒரு மாவட்டத்திலிருந்து மற்றொரு பகுதிக்கு சரக்குகளை ஏற்றிச் செல்வதற்கான அனுமதி குறித்து சங்கத்தினர் விசாரணை மேற்கொண்டனர். அதற்கு, ஒப்பந்ததாரரின் அறிவுறுத்தலின் பேரிலேயே சரக்குகளை ஏற்றிச் செல்வதாக ஓட்டுநர்கள் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர் தரப்பினருடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது. பேச்சுவார்த்தையின் முடிவில் உடன்பாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து, சிறைபிடிக்கப்பட்ட 4 லாரிகளும் விடுவிக்கப்பட்டன.

இதுகுறித்து லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் கூறுகையில், “வெளிமாநில லாரிகள் தமிழகத்தில் சரக்குகளை இறக்கிய பின்னர், விதிகளை மீறி மீண்டும் தமிழகத்திலேயே சரக்குகளை ஏற்றிச் செல்கின்றன. இதனால் உள்ளூர் லாரி உரிமையாளர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்படுகிறது” என குற்றம்சாட்டினர்.

மேலும், வட்டாரப் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் இதுபோன்ற விதிமீறல்கள் குறித்து முறையான சோதனைகளை நடத்துவதில்லை என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

எனவே, தூத்துக்குடி மாவட்டத்தில் வெளிமாநில லாரிகளின் இயக்கம் குறித்து அதிகாரிகள் தொடர் சோதனைகளை மேற்கொண்டு, விதிமீறலில் ஈடுபடும் வாகனங்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.