தமிழ்நாடு கிராம வங்கி அதிகாரிகள் மீது தாக்குதல்: குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி தூத்துக்குடி அருகே கண்டன ஆர்ப்பாட்டம்!

தமிழ்நாடு கிராம வங்கி அதிகாரிகள் மீது தாக்குதல்: குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி தூத்துக்குடி அருகே கண்டன ஆர்ப்பாட்டம்!

தமிழ்நாடு கிராம வங்கியின் ஆறுமுகநேரி கிளையில் அலுவல் பணியில் ஈடுபட்டிருந்த கிளை மேலாளர் மற்றும் உதவி மேலாளர் மீது நடைபெற்ற தாக்குதல் சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்து, தாக்குதலில் ஈடுபட்ட குற்றவாளிகளை உடனடியாக கைது செய்து கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, தூத்துக்குடி விவிடி சிக்னல் அருகே வங்கி அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் சார்பில் வெள்ளிக்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு கிராம வங்கி ஆபீசர்ஸ் அசோசியேஷன் தலைவர் அண்டோ கால்பர்ட் தலைமை வகித்தார். இதில் தமிழ்நாடு கிராம வங்கி ஒர்க்கர்ஸ் யூனியன் தலைவர் லட்சுமி நாராயணன், ஆபீசர்ஸ் அசோசியேஷன் பொதுச் செயலாளர் அறிவுடை நம்பி, யூனியன் நிர்வாகி அஸ்வத், தமிழ்நாடு கிராம வங்கி ஓய்வுபெற்றோர் சங்க பொதுச் செயலாளர் சோலை மாணிக்கம், BEFI மாநில நிர்வாகி சிவசங்கரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர்.

ஆர்ப்பாட்டத்தில் பேசிய நிர்வாகிகள், வங்கி ஊழியர்கள் பொதுமக்களுக்கு கடன் வழங்குதல், கடன் வசூல், சுயஉதவி குழுக்களுக்கு நிதிச் சேவைகள் வழங்குதல், அரசின் பல்வேறு நலத்திட்ட நிதி பரிவர்த்தனைகளை மேற்கொள்ளுதல் உள்ளிட்ட முக்கிய களப்பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாக தெரிவித்தனர். இத்தகைய பொது சேவையில் ஈடுபடும் அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தப்படுவது மிகவும் கண்டிக்கத்தக்கது என்றும், இது வங்கி ஊழியர்களின் பாதுகாப்பிற்கும் பொதுமக்கள் பெறும் சேவைக்கும் அச்சுறுத்தலாகும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.

மேலும், பொதுமக்களுக்கு சேவை செய்யும் பணியில் சென்ற வங்கி அதிகாரிகள் காயமடைந்து திரும்ப வேண்டிய நிலை எந்த சூழ்நிலையிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும், இந்த வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் மீது உடனடியாக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறும் அபாயம் இருப்பதாகவும் அவர்கள் எச்சரித்தனர்.

ஆர்ப்பாட்டத்தின் முடிவில், தாக்குதலில் ஈடுபட்ட அனைவரையும் உடனடியாக கைது செய்ய வேண்டும், கடுமையான சட்டப்பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும், மேலும் அலுவல் பணியில் ஈடுபடும் வங்கி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளின் பாதுகாப்பை அரசு மற்றும் காவல்துறை உறுதி செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.