தூத்துக்குடியில் பரபரப்பு: பூட்டிய வீட்டை உடைத்து 17 பவுன் நகை திருட்டு – ஆட்டோ ஓட்டுநர் கைது!

தூத்துக்குடியில் பரபரப்பு: பூட்டிய வீட்டை உடைத்து 17 பவுன் நகை திருட்டு – ஆட்டோ ஓட்டுநர் கைது!

தூத்துக்குடி மத்திய அரசு ஊழியர்கள் குடியிருப்பில் பூட்டியிருந்த வீட்டின் கதவை உடைத்து 17 பவுன் தங்க நகைகளை திருடிய வழக்கில், ஆட்டோ ஓட்டுநரை தென்பாகம் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

தூத்துக்குடி மத்திய அரசு ஊழியர்கள் குடியிருப்பைச் சேர்ந்த ராஜா சீனிவாசனின் மனைவி உமாதேவி (61), கடந்த ஜூலை 22-ஆம் தேதி குடும்பத்தினருடன் சுந்தரவேல்புரத்திற்குச் சென்றுவிட்டு வீடு திரும்பியபோது, வீட்டின் முன் கதவும் பீரோவும் உடைக்கப்பட்டு, அதில் இருந்த 17 பவுன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இதுகுறித்து உமாதேவி அளித்த புகாரின் பேரில், தூத்துக்குடி தென்பாகம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். சம்பவ இடம் மற்றும் சுற்றுவட்டாரங்களில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில், அண்ணா நகரைச் சேர்ந்த நாராயணன் மகன் சீமான் (38) என்பவர் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதையடுத்து ஆட்டோ ஓட்டுநரான சீமானை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, தனது நண்பர்கள் இருவரின் உதவியுடன் திருடப்பட்ட நகைகளை வங்கியில் அடகு வைத்திருப்பதாக அவர் தெரிவித்ததாக போலீசார் கூறினர்.

கைது செய்யப்பட்ட சீமானை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்த போலீசார், இவ்வழக்கில் தொடர்புடைய தலைமறைவாக உள்ள மேலும் இருவரை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.