தூத்துக்குடியில் 83 வயது முதியவரின் சொத்தை அபகரிக்க முயற்சி? எஸ்.பி. அலுவலகத்தில் பரபரப்பு புகார்

தூத்துக்குடியில் 83 வயது முதியவரின் சொத்தை அபகரிக்க முயற்சி? எஸ்.பி. அலுவலகத்தில் பரபரப்பு புகார்

தூத்துக்குடி சின்னமணி நகர் பகுதியில் வாடகைக்கு விட்ட தனது சொத்தை அபகரிக்க முயற்சி நடைபெறுவதாக குற்றம்சாட்டி, 83 வயதான முதியவர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (SP) அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

சின்னமணி நகர் பகுதியைச் சேர்ந்த வேல் நாடார் (83), தனது பேத்தி கிருஷ்ணவேணியுடன் இன்று எஸ்.பி. அலுவலகத்திற்கு வந்து மனு அளித்தார். அதில், தன்னுடைய சொத்தை போலியான ஆவணங்கள் மூலம் அபகரிக்க முயற்சி செய்யப்படுவதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இதுகுறித்து அவரது பேத்தி கிருஷ்ணவேணி செய்தியாளர்களிடம் கூறுகையில், கடந்த 60 ஆண்டுகளாக அந்த பகுதியில் வசித்து வரும் தனது தாத்தா, ரெட்டை பாலம் எதிரே மூன்று கடைகள் கட்டி வாடகைக்கு விட்டிருந்தார். அவற்றில் ஒரு கடையை தங்கராஜ் மற்றும் ஆனந்தராஜ் என்ற சகோதரர்களுக்கு வாடகைக்கு வழங்கியிருந்ததாக தெரிவித்தார்.

பின்னர், அந்த இடத்தை விற்க முயன்றபோது, போலியான ஆவணங்கள் தயாரித்து இடத்தை அபகரிக்க முயற்சி நடந்ததை அறிந்து நீதிமன்றத்தை அணுகியதாகவும், மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டதில் தீர்ப்பு தங்களுக்குச் சாதகமாக வந்ததாகவும் கூறினார்.

அதன்படி, அமீன் மூலம் கடை காலி செய்யப்பட்டது. ஆனால், வேல் நாடார் உடல்நலக்குறைவால் சென்னையில் சிகிச்சை பெற்று கொண்டிருந்த நேரத்தை பயன்படுத்தி, அதே நபர்கள் மீண்டும் அந்த இடத்தை ஆக்கிரமித்து கடை நடத்த தொடங்கியதாக குற்றம்சாட்டினார்.

மேலும், அவர்கள் அமைத்திருந்த தகர செட் மற்றும் வேலிகளை அகற்றியதோடு, மதில் சுவர் தொடர்பான விவகாரமும் சுப்ரீம் கோர்ட்டில் எடுத்துச் செல்லப்பட்டதில் அதிலும் தீர்ப்பு தங்களுக்கு சாதகமாக வந்ததாக தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து, தென்பாகம் காவல் நிலையத்தில் புகார் அளித்தபோது, பப்ளிக் பிராசிக்யூட்டர் கருத்து பெறுமாறு போலீசார் கூறியதாகவும், அதன்படி பெற்ற ஆவணங்களில் இடம் வேல் நாடாருக்குச் சொந்தமானது உறுதி செய்யப்பட்டதாகவும் கூறினார்.

இந்நிலையில், தண்ணீர் வரி மற்றும் சொத்து வரி உள்ளிட்ட கட்டணங்களை செலுத்திய பின்னரும், காவல்துறையினர் உரிய பாதுகாப்பு வழங்கவில்லை என்றும், மாறாக தங்கள்மீதே வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் குற்றம்சாட்டினார்.

இதனால், தாங்கள் அளித்த புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்காததால், இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மீண்டும் மனு அளித்துள்ளதாக தெரிவித்தார்.

இந்த சம்பவம் தூத்துக்குடி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.