தூத்துக்குடியில் நாளை முதல் அதிரடி கட்டுப்பாடு! கலப்பு குப்பை கொடுத்தால் குப்பை வண்டி வராது... மின்சாரம், குடிநீர் இணைப்பும் துண்டிப்பா? மாநகராட்சி எச்சரிக்கை!

தூத்துக்குடியில் நாளை முதல் அதிரடி கட்டுப்பாடு! கலப்பு குப்பை கொடுத்தால் குப்பை வண்டி வராது... மின்சாரம், குடிநீர் இணைப்பும் துண்டிப்பா? மாநகராட்சி எச்சரிக்கை!

தூத்துக்குடி: தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில், செப்டம்பர் 1, 2026 முதல் பிரிக்கப்படாத கலவைக் கழிவுகள் எக்காரணம் கொண்டும் சேகரிக்கப்பட மாட்டாது என மாநகராட்சி நிர்வாகம் அதிரடியாக அறிவித்துள்ளது.

திடக்கழிவு மேலாண்மை விதிகள், 2026-ன் கீழ், குடியிருப்புகள் மற்றும் வணிக நிறுவனங்களில் இருந்து கழிவுகளை 4 வகைகளாகப் பிரித்து வீடு வீடாகச் சேகரிக்கும் நடைமுறை செப்டம்பர் 1 முதல் தீவிரமாக அமல்படுத்தப்பட உள்ளது.

இதன்படி, பொதுமக்கள் தங்கள் வீடுகளிலேயே கழிவுகளைப் பிரித்து, அதற்குரிய வண்ணத் தொட்டிகள் அல்லது பைகளில் மட்டுமே மாநகராட்சி பணியாளர்களிடம் ஒப்படைக்க வேண்டும்.

???? ஈரக்கழிவு / மக்கும் கழிவு:

சமையலறைக் கழிவுகள், சமைத்த மற்றும் சமைக்காத உணவுகள், காய்கறி, பழங்கள், இறைச்சி, பூக்கள், தேயிலை/காபித் தூள், முட்டை ஓடுகள் உள்ளிட்டவை. இவை தினமும் சேகரிக்கப்படும்.

???? உலர் கழிவு / மக்காத கழிவு:

காகிதம், பிளாஸ்டிக், உலோகம், கண்ணாடி, அட்டைப் பெட்டிகள், துணிகள் மற்றும் பொதிப் பொருட்கள் உள்ளிட்டவை. இவையும் தினமும் சேகரிக்கப்படும்.

???? சுகாதாரக் கழிவு:

பயன்படுத்தப்பட்ட டயப்பர்கள், சானிட்டரி நாப்கின்கள், டாம்பன்கள், ஆணுறைகள், சிறுநீர்க் கசிவுத் தாள்கள் உள்ளிட்டவை. இவை தினமும் சேகரிக்கப்படும்.

⚫ சிறப்புக் கவனிப்புக் கழிவு / வீட்டு அபாயகரக் கழிவு:

பெயிண்ட் டப்பாக்கள், பூச்சிக்கொல்லி கலன்கள், CFL மற்றும் டியூப் லைட்டுகள், காலாவதியான மருந்துகள், பேட்டரிகள், ஊசிகள்/சிரிஞ்சுகள் மற்றும் மின்னணுக் கழிவுகள் உள்ளிட்டவை. இவை வாரம் ஒருமுறை, ஒவ்வொரு புதன்கிழமையும் சேகரிக்கப்படும்.

⚠️ கலப்பு குப்பைக்கு இனி இடமில்லை!

செப்டம்பர் 1 முதல் பிரிக்கப்படாத கலவைக் கழிவுகள் எக்காரணம் கொண்டும் சேகரிக்கப்படாது என மாநகராட்சி நிர்வாகம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

மேலும், மாநகராட்சியின் கழிவு மேலாண்மை விதிமுறைகளை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும், விதிமீறல் தொடரும் பட்சத்தில் மின்சாரம் மற்றும் குடிநீர் இணைப்புகள் துண்டிக்கப்படும் என்றும் தூத்துக்குடி மாநகராட்சி ஆணையாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதனால் தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் மற்றும் வணிக நிறுவனங்கள், செப்டம்பர் 1 முதல் குப்பைகளை 4 வகைகளாகப் பிரித்து வழங்குவதை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.