கிள்ளிகுளம் வேளாண்மை கல்லூரி தினக்கூலி தொழிலாளர்களுக்கு பணி நிரந்தரம் அல்லது ஆண்டுக்கு 235 நாட்கள் வேலை வழங்க கோரிக்கை!

கிள்ளிகுளம் வேளாண்மை கல்லூரி தினக்கூலி தொழிலாளர்களுக்கு பணி நிரந்தரம் அல்லது ஆண்டுக்கு 235 நாட்கள் வேலை வழங்க கோரிக்கை!

தூத்துக்குடி:

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரியான கிள்ளிகுளம் வ.உ.சி. வேளாண்மை கல்லூரியில் நீண்டகாலமாக தினக்கூலி அடிப்படையில் பணியாற்றி வரும் தொழிலாளர்களுக்கு பணி நிரந்தரம் வழங்க வேண்டும் அல்லது ஆண்டுக்கு குறைந்தபட்சம் 235 நாட்கள் பணி வழங்க வேண்டும் என வலியுறுத்தி, தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக பண்ணை தொழிலாளர்கள் சார்பில்  தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.

மனுவில் கூறியிருப்பதாவது:

கிள்ளிகுளம் வ.உ.சி. வேளாண்மை கல்லூரியில் சுமார் 30 பேர் தினக்கூலி அடிப்படையில் பணியாற்றி வருகிறோம். இதில் பலர் கடந்த 15 முதல் 25 ஆண்டுகளாக தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர். கடந்த 2019-ஆம் ஆண்டு சுமார் 28 பேருக்கு பணி நிரந்தரம் செய்யப்பட்ட நிலையில், அதன் பின்னர் நீண்டகாலமாக பணியாற்றி வரும் தினக்கூலி தொழிலாளர்களுக்கு பணி நிரந்தரம் செய்யப்படவில்லை.

தமிழ்நாடு முதலமைச்சர், 5 ஆண்டுகள் பணி நிறைவு செய்தவர்களுக்கு பணி நிரந்தரம் வழங்கப்படும் என தெரிவித்திருந்த நிலையில், பல ஆண்டுகளாக பணியாற்றி வரும் தங்களையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும், தற்போது நிர்வாகத்திடம் போதிய நிதி இல்லை எனக் கூறி ஆண்டுக்கு 235 நாட்கள் பணி வழங்க மறுக்கப்படுவதாகவும், வாரத்திற்கு 3 அல்லது 4 நாட்கள் மட்டுமே வேலை வழங்கப்படுவதால் தங்களது வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

எனவே, நீண்டகாலமாக தினக்கூலி அடிப்படையில் பணியாற்றி வரும் தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் அல்லது குறைந்தபட்சம் ஆண்டுக்கு 235 நாட்கள் பணி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்  மனு அளித்துள்ளனர்.

தங்களது கோரிக்கையை அரசு மற்றும் பல்கலைக்கழக நிர்வாகம் பரிசீலித்து, பல ஆண்டுகளாக தினக்கூலி பணியாளர்களாக பணியாற்றி வரும் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும்  கேட்டுக்கொண்டுள்ளனர்.