லாக்அப் படுகொலைக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி மறுப்பதா காவல்துறைக்கு வாலிபர் சங்கம் கண்டனம்!

லாக்அப் படுகொலைக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி மறுப்பதா காவல்துறைக்கு வாலிபர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் தூத்துக்குடி மாவட்ட தலைவர் தினேஷ்குமார் மாவட்ட செயலாளர் சுரேஷ் ஆகியோர் விடுத்துள்ள கண்டன அறிக்கையில்,
சிவகங்கையில் மாவட்டம் திருப்புவனத்தில் நடந்த லாக்அப் படுகொலையில் இளைஞர் அஜித்குமார் உயிரிழந்த சம்பவத்திற்கு காரணமான காவலர்களைக் கண்டித்தும், குற்றவாளிகள் அனைவரும் கைது செய்யப்பட வேண்டும், திருப்பூர் மாவட்டம் அவினாசியில் இளம்பெண் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கோவில்பட்டியில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் இந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கேட்டு காவல்துறையிடம் மனு அளிக்கப்பட்டது. இந்நிலையில், ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி மறுக்கப்படுகிறது என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அவர்கள் கூறும் காரணமானது இந்த சம்பவத்தில் வழக்கு விசாரணையானது சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. வழக்கு நடைபெற்றுக் கொண்டிருப்பதால் அதைப் பற்றி பேசக்கூடாது என்று கூறுகிறார்கள். மேலும் காவல் உயர் அதிகாரிகள் வழிகாட்டுதல்படி அனுமதி கிடையாது என்றும் கூறுகிறார்கள்.
ஆனால், எழுத்துப்பூர்வமாக தரும் கடிதத்தில் அவர்கள் கூறும் காரணம் மாறாக உள்ளது. ஆர்ப்பாட்டம் நடத்தும் இடம் போக்குவரத்து அதிகம் உள்ளது. பொதுமக்கள், வியாபாரிகளுக்கு சிரமம் உண்டாக்கும், ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்வோர் எண்ணிக்கை, வயது மற்றும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்வோர் உடல்நிலை கருதி உரிய மருத்துவ வசதி குறிப்பிடவில்லை என ஏற்க முடியாத காரணங்களை கூறி காவல்துறை அனுமதி மறுத்துள்ளனர். எனவே காவல்துறையின் இந்த நடவடிக்கை மிகவும் கண்டிக்கத்தக்கது.
தமிழகத்தில் நடக்கும் குற்றங்களையும், அவலங்களையும் தடுக்க தவறிய காவல்துறையை கண்டித்து ஜனநாயக முறையில் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கேட்டால் தொடர்ந்து அனுமதி மறுக்கும் கோவில்பட்டி காவல்துறையின் இந்த நடவடிக்கையை இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் தூத்துக்குடி மாவட்ட குழு சார்பாக வன்மையாக கண்டிக்கின்றோம்.