தூத்துக்குடியில் கோவில் உண்டியல் உடைப்பு – ரூ.10 ஆயிரம் கொள்ளை! சிசிடிவியில் சிக்கிய 2 மர்ம நபர்கள்

தூத்துக்குடியில் கோவில் உண்டியல் உடைப்பு – ரூ.10 ஆயிரம் கொள்ளை! சிசிடிவியில் சிக்கிய 2 மர்ம நபர்கள்

தூத்துக்குடி: கிருஷ்ணராஜபுரம் பகுதியில் பெருமாள் கோவிலின் பூட்டை உடைத்து, உண்டியலில் இருந்த சுமார் ரூ.10,000 பணத்தை கொள்ளையடித்துச் சென்ற இரு மர்ம நபர்களை வடபாகம் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

தூத்துக்குடி கிருஷ்ணராஜபுரம் 1-வது தெருவில் பத்ரகாளி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இதற்கு எதிரே, கோவிலுக்குப் பாத்தியப்பட்ட பெருமாள் கோவில் அமைந்துள்ளது. கோவில் வளாகத்தில் உள்ள கிரில் கேட் அருகே சிறிய அளவிலான உண்டியல் வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், நேற்று நள்ளிரவு அங்கு வந்த இரு மர்ம நபர்கள், கிரில் கேட்டின் பூட்டை உடைத்து கோவில் வளாகத்திற்குள் புகுந்துள்ளனர். பின்னர், அங்கிருந்த உண்டியலை உடைத்து அதிலிருந்த சுமார் ரூ.10,000 பணத்தை கொள்ளையடித்துவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

இன்று காலை வழக்கம்போல் கோவிலைத் திறக்க வந்த பூசாரி, கிரில் கேட் பூட்டுகள் உடைக்கப்பட்டு, உண்டியல் கொள்ளையடிக்கப்பட்ட நிலையில் கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இதுகுறித்து உடனடியாக தூத்துக்குடி வடபாகம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வடபாகம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் வேல்ராஜ் தலைமையிலான போலீசார், அங்கு தீவிர விசாரணை நடத்தினர்.

மேலும், கோவில் பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அதில், நள்ளிரவில் இரு வாலிபர்கள் கோவில் கேட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று, உண்டியலை உடைத்து பணத்தை கொள்ளையடித்துவிட்டு தப்பிச் சென்ற காட்சிகள் பதிவாகியிருந்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து, சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் இரு மர்ம நபர்களையும் அடையாளம் காணும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். மேலும், அவர்களை கைது செய்ய தீவிர தேடுதல் வேட்டையும் நடைபெற்று வருகிறது.

குடியிருப்புகள் நிறைந்த பகுதியில் நள்ளிரவில் கோவில் பூட்டை உடைத்து உண்டியல் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.