குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் ஆடி கொடை விழா ஆகஸ்ட் 3-ஆம் தேதி தொடக்கம் – தசரா விழா அக்டோபர் 11-ஆம் தேதி கொடியேற்றத்துடன் ஆரம்பம்

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் ஆடி கொடை விழா ஆகஸ்ட் 3-ஆம் தேதி தொடக்கம் – தசரா விழா அக்டோபர் 11-ஆம் தேதி கொடியேற்றத்துடன் ஆரம்பம்

தூத்துக்குடி: உலகப் புகழ்பெற்ற குலசேகரன்பட்டினம் அருள்மிகு முத்தாரம்மன் திருக்கோவிலில் நடைபெறும் ஆடி கொடை விழா அடுத்த மாதம் ஆகஸ்ட் 3-ஆம் தேதி இரவு 9 மணிக்கு மாக்காப்பு தீபாராதனையுடன் கோலாகலமாக தொடங்குகிறது.

ஆண்டுதோறும் நடைபெறும் தசரா திருவிழாவுக்கு முன்னோட்டமாக நடத்தப்படும் ஆடி கொடை விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று அம்மனை தரிசிப்பது வழக்கம். விழாவின் முதல் நாளான ஆகஸ்ட் 3-ஆம் தேதி இரவு 10 மணிக்கு தென்காசி சத்யா–செல்வின் குழுவினரின் வில்லிசை நிகழ்ச்சி நடைபெறுகிறது.

ஆகஸ்ட் 4-ஆம் தேதி காலை 6, 8, மாலை 5, இரவு 7 மணிக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெறும். காலை 10 மணிக்கு கும்பம் வீதி உலா, மதியம் 12 மற்றும் இரவு 7 மணிக்கு அன்னதானம், இரவு 9 மணிக்கு சிறப்பு அலங்கார தீபாராதனை, இரவு 11 மணிக்கு கும்பம் திருவீதி உலா நடைபெறுகிறது.

ஆகஸ்ட் 5-ஆம் தேதி காலை 8 மணி மற்றும் பகல் 12 மணிக்கு அன்னதானம், காலை 11 மணிக்கு கும்பம் வீதி உலா, காலை 11.30 மணிக்கு வில்லிசை நிகழ்ச்சி நடைபெறும். மாலை 5 மணிக்கு அம்மன் மஞ்சள் நீராட்டு விழா, இரவு 8.30 மணிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை, இரவு 9 மணிக்கு சிறப்பு மகுடம் நடைபெறுகிறது.

விழாவையொட்டி தமிழகம் முழுவதிலிருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பக்தர்களின் வசதிக்காக தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் தென்காசி மாவட்டங்களில் இருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

இதனைத் தொடர்ந்து, உலகப் புகழ்பெற்ற குலசை தசரா திருவிழா வரும் அக்டோபர் 11-ஆம் தேதி அதிகாலை 5 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. திருவிழாவின் உச்ச நிகழ்வான மகிஷாசூரசம்ஹாரம் அக்டோபர் 20-ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த நிகழ்வில் சுமார் 20 லட்சம் பக்தர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், இந்து சமய அறநிலையத்துறை சார்பில் விரிவான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.