தூத்துக்குடியில் பரிதாபம்: இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்த முதியவர் உயிரிழப்பு!

தூத்துக்குடியில் பரிதாபம்: இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்த முதியவர் உயிரிழப்பு!

தூத்துக்குடியில் இருசக்கர வாகனத்தில் சென்றபோது நிலைதடுமாறி கீழே விழுந்து படுகாயமடைந்த 60 வயது முதியவர், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

தூத்துக்குடி சுந்தரவேல்புரம் அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர் சங்கரன் மகன் மதுரை வீரன் (60). இவர் தனது இருசக்கர வாகனத்தில் ஸ்டேட் பேங்க் காலனி பகுதியில் உள்ள கைலாஷ் மஹால் அருகே சாலையில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது எதிர்பாராதவிதமாக இருசக்கர வாகனம் நிலைதடுமாறியதில், மதுரை வீரன் கீழே விழுந்து பலத்த காயமடைந்தார்.

இதையடுத்து அப்பகுதியினர் அவரை மீட்டு, உடனடியாக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த சம்பவம் குறித்து தூத்துக்குடி வடபாகம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தூத்துக்குடியில் இருசக்கர வாகன விபத்தில் முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.