தூத்துக்குடி அரசு பள்ளியில் 8-ஆம் வகுப்பு மாணவனுக்கு பாலியல் துன்புறுத்தல்: 9 சக மாணவர்கள் கைது!

தூத்துக்குடி விளாத்திகுளம் கல்வி வட்டார்த்திற்கு உட்பட்ட அரசு மேல்நிலைப் பள்ளியில் 8-ஆம் வகுப்பு மாணவரை துன்புறுத்தியதாக 9 சக மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். POCSO, BNS சட்டங்களின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

தூத்துக்குடி அரசு பள்ளியில் 8-ஆம் வகுப்பு மாணவனுக்கு பாலியல் துன்புறுத்தல்: 9 சக மாணவர்கள் கைது!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் கல்வி வட்டாரத்திற்குட்பட  அரசு மேல்நிலைப் பள்ளியில் 8-ஆம் வகுப்பு மாணவரை தொடர்ந்து கொடூரமாகத் துன்புறுத்தியதாக 9 சக மாணவர்கள் கைது செய்யப்பட்டு, சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் கல்வி வட்டாரத்திற்குட்பட அரசு மேல்நிலைப் பள்ளியில் கடந்த ஆகஸ்ட் 18-ஆம் தேதி மாலை அதிர்ச்சியளிக்கும் சம்பவம் நடைபெற்றதாக கூறப்படுகிறது.

பள்ளி நூலக அறையில் வைத்து 8-ஆம் வகுப்பு படிக்கும் மாணவர் ஒருவரை அவரது சக மாணவர்கள் துன்புறுத்தியதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதில், மாணவரின் பிறப்புறுப்பில் மிளகாய்ப் பொடியைத் தூவி கொடூரமாக சித்ரவதை செய்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவத்தால் பாதிக்கப்பட்ட மாணவர், பின்னர் நடந்தவற்றை தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர், சம்பவம் தொடர்பாக போலீசில் புகார் அளித்தனர்.

கடந்த ஆகஸ்ட் 31-ஆம் தேதி விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் மாணவரின் பெற்றோர் புகார் அளித்தனர்.

புகாரின் அடிப்படையில், காவல் ஆய்வாளர் மங்கையர்க்கரசி தலைமையிலான போலீசார் விசாரணையைத் தொடங்கினர். விசாரணையில், இது ஒரே ஒரு சம்பவம் அல்ல என்றும், பாதிக்கப்பட்ட மாணவர் 7-ஆம் வகுப்பு படித்த காலத்திலிருந்தே இதுபோன்ற துன்புறுத்தல் தொடர்ந்ததாகவும் போலீசாரின் விசாரணையில் தெரியவந்ததாக கூறப்படுகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக பாரதிய நியாய சன்ஹிதா (BNS) மற்றும் போக்சோ (POCSO) சட்டங்களின் கீழ் 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சம்பவத்தில் தொடர்புடையதாகக் கூறப்படும் 9 மாணவர்களை போலீசார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட மாணவர்கள் தூத்துக்குடியில் உள்ள சிறார் நீதிக்குழுமம் முன்பாக ஆஜர்படுத்தப்பட்டனர். பின்னர், செப்டம்பர் 1-ஆம் தேதி இரவு திருநெல்வேலியில் உள்ள சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் அவர்கள் அடைக்கப்பட்டனர்.

மேலும், பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களிடமும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மாணவர் தொடர்ந்து துன்புறுத்தப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், பள்ளி நிர்வாகத்துக்கு இதுகுறித்து முன்கூட்டியே தகவல் இருந்ததா என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களிலும் விசாரணை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

பள்ளி வளாகத்திலேயே மாணவர் ஒருவர் நீண்டகாலமாக துன்புறுத்தப்பட்டதாக கூறப்படும் இந்த சம்பவம் பெற்றோர் மற்றும் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதுடன், பள்ளிகளில் நடைபெறும் சக மாணவர் துன்புறுத்தல் மற்றும் வன்முறை சம்பவங்களைத் தடுக்க உரிய கண்காணிப்பும் நடவடிக்கையும் அவசியம் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

தூத்துக்குடி பள்ளி மாணவர் சித்ரவதை சம்பவம் தொடர்பாக 9 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும்  பள்ளி நிர்வாகத்தினரிடம் போலீசாரின் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.