தூத்துக்குடி அனல் மின் நிலையத்தை அகற்றுவதா? தமிழக அரசின் அறிவிப்புக்கு CITU கடும் எதிர்ப்பு!

தூத்துக்குடி அனல் மின் நிலையத்தை அகற்றுவதா? தமிழக அரசின் அறிவிப்புக்கு CITU கடும் எதிர்ப்பு!

தூத்துக்குடி:

நல்ல முறையில் இயங்கி வரும் தூத்துக்குடி அனல் மின் நிலையத்தை தனியார் மின் உற்பத்தி மூலம் மாற்றி, புதிய மின் நிலையம் அமைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருப்பது அதிர்ச்சியளிப்பதாக தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் CITU மாநில உதவி தலைவர் எஸ். அப்பாதுரை தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி அனல் மின் நிலையம் முன்பு, மின்வாரியத்தில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு CITU சார்பில் தர்ணா போராட்டம் நடைபெற்றது.

ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தல்

மின்வாரியத்தில் பல ஆண்டுகளாக ஒப்பந்த தொழிலாளர்களாக பணியாற்றி வருபவர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்றும், 10 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றிய ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்யாமல், TNPSC மூலம் 5 ஆண்டுகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் 10 ஆயிரம் பேரை நியமிக்கும் அறிவிப்பை திரும்பப் பெற வேண்டும் என்றும் போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

மேலும், நிரந்தரத் தன்மை கொண்ட பணிகளில் ஒப்பந்த முறையை கொண்டு வரக்கூடாது என்றும், உச்சநீதிமன்ற தீர்ப்புகளுக்கு முரணான வகையில் ஒப்பந்த பணியாளர் முறையை அமல்படுத்துவதை அனுமதிக்க முடியாது என்றும் போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.

தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும்

தவெக சார்பில் தேர்தல் அறிக்கையில் 5 ஆண்டுகள் ஒப்பந்த தொழிலாளர்களாக பணியாற்றியவர்களை பணி நிரந்தரம் செய்வோம் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அதற்கு மாறாக 5 ஆண்டுகளுக்கு மட்டுமே நிரந்தரப் பணி என்ற அறிவிப்பு வெளியாகியிருப்பதாக CITU நிர்வாகிகள் குற்றம்சாட்டினர்.

இதனால் பல ஆண்டுகளாக ஒப்பந்த தொழிலாளர்களாக பணியாற்றி வரும் ஊழியர்களிடையே அதிர்ச்சியும் ஏமாற்றமும் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

தூத்துக்குடி அனல் மின் நிலையத்தை அகற்றுவதா?

போராட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் மாநில உதவி தலைவர் எஸ். அப்பாதுரை கூறியதாவது:

"தமிழகத்தில் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு தவெக சார்பில் மின்வாரிய ஒப்பந்த ஊழியர்களை பணி நிரந்தரம் செய்வோம் என தேர்தல் வாக்குறுதி அளிக்கப்பட்டது. ஆனால் தற்போது அந்த வாக்குறுதிக்கு மாறாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மத்திய அரசின் அக்னிபாத் திட்டத்தைப் போல, தமிழ்நாடு மின்சார வாரியத்திலும் 5 ஆண்டுகளுக்கு நிரந்தரப் பணி என்ற அறிவிப்பு சட்டமன்றத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

பல ஆண்டுகளாக ஒப்பந்த தொழிலாளர்களாக பணியாற்றி வருபவர்கள், விஜய் முதல்வரானதும் தங்களது பணிகள் நிரந்தரம் செய்யப்படும் என எதிர்பார்த்திருந்தனர். ஆனால் தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பு அவர்களுக்கு அதிர்ச்சியையும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

1,050 மெகாவாட் மின் உற்பத்தி செய்யக்கூடிய தூத்துக்குடி அனல் மின் நிலையம் நல்ல முறையில் இயங்கி வரும் நிலையில், அதை தனியார் மின் உற்பத்தி மூலம் அகற்றிவிட்டு புதிய நிலையம் அமைக்கப்படும் என்ற தமிழக அரசின் அறிவிப்பு இங்கு பணியாற்றும் அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தேர்தல் வாக்குறுதியில் முதல்வர் விஜய் தெரிவித்தது போல தற்காலிக ஊழியர்களின் பணியை நிரந்தரம் செய்ய வேண்டும்."

என்று அவர் தெரிவித்தார்.

நிர்வாகிகள் பங்கேற்பு

இந்த தர்ணா போராட்டத்தில் மின் ஊழியர் மத்திய அமைப்பு CITU திட்டத் தலைவர் கணபதி சுரேஷ், திட்டச் செயலாளர் சுடலைமுத்து, பொருளாளர் செல்வி, மாநில துணைத் தலைவர் எஸ். அப்பாதுரை, CITU மாவட்டச் செயலாளர் ஆர். ரசல், மாவட்டத் தலைவர் இரா. பேச்சிமுத்து, மாவட்ட உதவித் தலைவர் ரவி தாகூர், வை. பாலசுப்பிரமணியன், மாநில உதவித் தலைவர் சந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.