சோகம்! தருவைகுளம் கடலில் மாயமான 2 மாணவர்கள் சடலமாக மீட்பு – கிராமமே கண்ணீரில்!

சோகம்! தருவைகுளம் கடலில் மாயமான 2 மாணவர்கள் சடலமாக மீட்பு – கிராமமே கண்ணீரில்!

தூத்துக்குடி அருகே தருவைகுளம் கடற்கரையில் கடலில் குளிக்கச் சென்றபோது மாயமான இரண்டு மாணவர்களும் இன்று காலை கடலடிப் பாறைகளுக்கு இடையே சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று தருவைகுளம் கடற்கரையில் இருந்து படகில் கடலுக்குள் சென்று குளித்தபோது, பலத்த காற்றால் படகு கட்டுப்பாட்டை இழந்து அடித்துச் செல்லப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் இரண்டு மாணவர்கள் கடலில் மூழ்கி மாயமானனர். தகவல் கிடைத்ததும் கடலோரப் பாதுகாப்புப் படையினர், மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து நேற்று இரவு முழுவதும் தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் இன்று காலை சங்கு குளிக்கும் தொழிலாளர்கள் ஆழ்கடலில் தேடுதல் மேற்கொண்டபோது, தருவைகுளம் கடற்கரையிலிருந்து சுமார் 300 மீட்டர் தொலைவில் உள்ள கடலடிப் பாறைகளுக்கு இடையே இரண்டு மாணவர்களின் சடலங்களும் இருப்பதை கண்டுபிடித்தனர். உடனடியாக மீனவர்கள் மற்றும் சங்கு குளிக்கும் தொழிலாளர்கள் இணைந்து இருவரின் உடல்களையும் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தருவைகுளம் கடலோரப் பாதுகாப்புக் குழும காவல் ஆய்வாளர் பேச்சிமுத்து தலைமையிலான காவல்துறையினர் உடல்களைக் கைப்பற்றி, உடற்கூறாய்விற்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக மரைன் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்த மாணவர்களின் உடல்கள் மீட்கப்பட்ட சம்பவம் தருவைகுளம் மற்றும் சுற்றுவட்டார மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குடும்பத்தினரின் கதறல் அங்கிருந்தவர்களை கண்கலங்கச் செய்தது.