ஓட்டப்பிடாரம் அருகே கணவன் இறந்த நிலையில், மனைவியின் பெயரை ரேஷன் கார்டில் இருந்து நீக்கிய அரசு அதிகாரிகள் – கண்டும் காணாமல் இருந்த உள்ளூர் எம்.எல்.ஏ!

ஓட்டப்பிடாரம் அருகே கணவன் இறந்த நிலையில், மனைவியின் பெயரை ரேஷன் கார்டில் இருந்து நீக்கிய அரசு அதிகாரிகள் – கண்டும் காணாமல் இருந்த உள்ளூர் எம்.எல்.ஏ!

தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் தாலுகாவில் அரசு அதிகாரிகளின் அலட்சியப் போக்கால் ஒரு மாற்றுத்திறனாளி குடும்பம் கடும் துயரத்திற்கு உள்ளான நிலையில், மாவட்ட ஆட்சியரின் உடனடி தலையீடு அந்த குடும்பத்திற்கு நிவாரணமாக அமைந்துள்ளது. ஆனால், சம்பவம் அறிந்தும் உள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் கண்டுகொள்ளாமல் இருந்தது கடும் விமர்சனத்திற்குரியதாகியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் அருகே உள்ள புதியம்புத்தூர் மேட்டுத் தெருவைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி – பேச்சியம்மாள் தம்பதிக்கு மாரிப்பிரியா, ஜோதி மீனா என இரண்டு மகள்கள். இதில் மூத்த மகள் மாரிப்பிரியா மாற்றுத்திறனாளி ஆவார். இளைய மகள் ஜோதி மீனா திருமணமாகி கணவர் வீட்டில் வசித்து வருகிறார்.

கிருஷ்ணமூர்த்தி, மனைவி பேச்சியம்மாள் மற்றும் மாற்றுத்திறனாளி மகள் மாரிப்பிரியா ஆகியோர் புதியம்புத்தூரில் வசித்து வந்த நிலையில், கிருஷ்ணமூர்த்தி கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பு சிறுநீரக பாதிப்பால் உயிரிழந்தார். இதையடுத்து, குடும்பத்தின் ஒரே ஆதாரமாக இருந்த கூலி வேலை மற்றும் ரேஷன் பொருட்கள் இல்லாமல் அந்த குடும்பம் கடும் வறுமையில் தள்ளப்பட்டது.

மாற்றுத்திறனாளி குடும்பமாக இருந்தும், அரசு சார்பில் எந்தவித உதவியும் இதுவரை கிடைக்காத நிலையில், வாழ்வாதாரமாக இருந்த ரேஷன் பொருட்களும் திடீரென நிறுத்தப்பட்டதால் குடும்பம் முற்றிலும் நொறுங்கியது.

சில தினங்களுக்கு முன்பு, பேச்சியம்மாள் நியாய விலை கடையில் ரேஷன் பொருட்கள் வாங்க சென்றபோது, “உங்கள் பெயர் ரேஷன் கார்டில் இருந்து நீக்கப்பட்டுவிட்டது” எனக் கூறி பொருட்கள் வழங்க மறுக்கப்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர், ஓட்டப்பிடாரம் தாலுகா அலுவலகத்தில் வட்ட வழங்கல் அலுவலரை அணுகினார்.

அப்போது, “உங்கள் கணவர் இறந்துவிட்டார். அவரது பெயரை நீக்க வேண்டிய இடத்தில் உங்கள் பெயரையே நீக்கிவிட்டோம். இதற்கு எங்களால் எதுவும் செய்ய முடியாது” என அலட்சியமாக பதிலளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும், “பக்கத்து வீட்டுக்காரர்கள் சொன்னதால் பெயரை நீக்கினோம். இதை சரிசெய்ய சென்னை சென்று முயற்சி செய்ய வேண்டும்” என கூறப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

ஒரு வேளை உணவுக்கே வழியில்லாத நிலையில் சென்னை சென்று அலைய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டதால், அந்த குடும்பம் கடும் மன உளைச்சலுக்கு உள்ளாகி, ஒரு கட்டத்தில் தற்கொலை முடிவுக்கும் சென்றதாக கூறப்படுகிறது.

விதிப்படி, ரேஷன் கார்டில் இறந்தவரின் பெயரை நீக்கும் முன், தாசில்தார், வருவாய் ஆய்வாளர், வி.ஏ.ஓ. ஆகியோர் நேரடி விசாரணை நடத்தி அறிக்கை அளிக்க வேண்டும். ஆனால், “பக்கத்து வீட்டாரிடம் கேட்டோம்” என்ற காரணத்தால் பெயரை நீக்கியது, நிர்வாக அலட்சியத்தின் உச்சமாக பார்க்கப்படுகிறது.

இந்த சம்பவம் குறித்து செய்திகள் வெளியானதை தொடர்ந்து, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம் பகவத் உடனடியாக தலையிட்டு, ரேஷன் கார்டு, மாற்றுத்திறனாளி மகளுக்கான ஆதார் கார்டு ஆகியவற்றை வழங்கினார். மேலும், மாதம் ரூ.2,000 பராமரிப்பு உதவித்தொகை, கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடு கட்ட இடம் ஒதுக்கீடு, ரூ.50,000 நிதியுதவி ஆகியவற்றையும் வழங்கி உறுதி அளித்தார்.

இதனைத் தொடர்ந்து, மாற்றுத்திறனாளி சங்கத்தினர், அப்பகுதி மக்கள், அரசியல் கட்சியினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் அரிசி, காய்கறி, மளிகைப் பொருட்கள், டிவி உள்ளிட்ட உதவிகளை வழங்கினர்.

ஆனால், சம்பவம் நடந்த ஓட்டப்பிடாரம் தொகுதியின் உள்ளூர் சட்டமன்ற உறுப்பினர், அனைத்தும் அறிந்தும் நேரில் சென்று அந்த குடும்பத்தை சந்திக்காமல் இருந்தது கடும் விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் நேரத்தில் வாக்கு கேட்கும் அரசியல்வாதிகள், மக்கள் நெருக்கடியில் இருக்கும்போது காணாமல் போவது எந்த வகை அரசியல் என பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

அதே நேரத்தில், நேர்மையாக செயல்பட்டு உடனடி நிவாரணம் வழங்கிய மாவட்ட ஆட்சியர் இளம் பகவத்துக்கும், மனிதாபிமான அடிப்படையில் உதவி செய்த அனைவருக்கும் அந்த குடும்பத்தினர் கண்ணீருடன் நன்றிகளை தெரிவித்துள்ளனர்.