அடிக்கடி மலச்சிக்கல் பிரச்சனையை சந்திக்குறீங்களா? அப்ப இதை கண்டிப்பா ட்ரை பண்ணுங்க...
நம்மில் பெரும்பாலானோர் வாழ்நாளில் ஒருமுறையாவது மலச்சிக்கல் பிரச்சனையை சந்தித்திருப்போம். மலச்சிக்கல் என்பது சீரற்ற குடல் இயக்கங்களால் சந்திக்கும் ஒரு பிரச்சனையாகும்.
நம்மில் பெரும்பாலானோர் வாழ்நாளில் ஒருமுறையாவது மலச்சிக்கல் பிரச்சனையை சந்தித்திருப்போம். மலச்சிக்கல் என்பது சீரற்ற குடல் இயக்கங்களால் சந்திக்கும் ஒரு பிரச்சனையாகும்.
இந்த பிரச்சனையில் மலக்குடலில் சேரும் கழிவுகளானது மிகவும் இறுக்கமாகி, அவற்றை வெளியேற்றுவதில் சிரமத்தை சந்திக்க நேரிடும். பெரும்பாலும் இந்த மலச்சிக்கல் பிரச்சனையானது உடலுழைப்பில்லாத வாழ்க்கை முறையினாலும், நார்ச்சத்து குறைவான உணவுகளை உண்பதாலும் ஏற்படுகின்றன. இது தவிர தினமும் போதுமான அளவு நீரை குடிக்காமல் இருப்பது, எண்ணெயில் பொரித்த உணவுகளை அதிகம் உண்பது மற்றும் காரமான உணவுகளை உண்பதனாலும் மலச்சிக்கல் பிரச்சனை வரக்கூடும். மேலும் அதிக மன அழுத்தம் ஒருவருக்கு மலச்சிக்கலை உண்டாக்கும்.
Also read.. தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பிப்.21ம் தேதி மின்தடை அறிவிப்பு!
இப்படிப்பட்ட மலச்சிக்கல் பிரச்சனையை ஒருவர் ஆரம்பத்திலேயே சரிசெய்ய முயற்சிக்காவிட்டால், அது தீவிரமடைந்து பைல்ஸை உண்டாக்கிவிடும். ஆனால் மலச்சிக்கல் பிரச்சனையை உணவுகள் மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்களின் மூலம் சரிசெய்யலாம். அதுவும் நம் வீட்டு சமையலறையில் உள்ள சில உணவுகளே மலச்சிக்கலுக்கு நல்ல நிவாரணத்தைத் தரும். குறிப்பாக சில உணவுகளை ஒன்றாக உட்கொள்ளும் போது, அது மலச்சிக்கலுக்கு உடனடி தீர்வைத் தரும். இப்போது மலச்சிக்கல் பிரச்சனையைத் தடுக்க உதவும் சில உணவுகளைக் காண்போம்.
தயிர் மற்றும் ஆளி விதை பொடி
தயிரில் குடல் ஆரோக்கியத்திற்கு நன்மை விளைவிக்கும் புரோபயோடிக் என்று அழைக்கப்படும் பிஃபிடோபாக்டீரியம் லாக்டிஸ் உள்ளது. இது செரிமான மண்டலத்தை சீராக செயல்பட வைக்கிறது. அதே சமயம் ஆளி விதையில் கரையக்கூடிய நார்ச்சத்து அதிகம் உள்ளது. கரையக்கூடிய நார்ச்சத்தானது நீரில் கரைந்து, இறுக்கமாக இருக்கும் மலத்தை மென்மையாக்கி எளிதில் வெளியேற்ற உதவும். ஆகவே தயிரையும், ஆளி விதை பொடியையும் ஒன்றாக உட்கொள்ளும் போது, மலச்சிக்கல் பிரச்சனை வராமல் தடுக்கலாம்.
நெல்லிக்காய் ஜூஸ்
நெல்லிக்காய் வைட்டமின் சி மற்றும் நார்ச்சத்து அதிகம் நிறைந்துள்ள அற்புதமான உணவுப் பொருள். முக்கியமாக இந்த நெல்லிக்காய் மலச்சிக்கல் பிரச்சனையை எளிதில் போக்கும். அதற்கு நெல்லிக்காயை அரைத்து சாறு எடுத்து, காலையில் எழுந்ததும், வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். இப்படி தினமும் குடித்து வந்தால், மலச்சிக்கல் பிரச்சனை ஏற்படுவது குறைய ஆரம்பிக்கும்.
ஓட்ஸ்
தற்போது மக்களிடையே ஓட்ஸ் சாப்பிடும் பழக்கம் அதிகரித்துள்ளது. குறிப்பாக உடல் எடையைக் குறைக்க நினைப்போரின் மத்தியில் ஓட்ஸ் மிகவும் பிரபலமான உணவுப் பொருள். ஓட்ஸில் கரையக்கூடிய மற்றும் கரையாத நார்ச்சத்துக்கள் அதிகளவில் உள்ளன. இவை மலச்சிக்கலில் இருந்து விடுவிக்க உதவி புரிவதோடு, குடலியக்கத்திற்கு ஆதரவை அளிக்கிறது.
நெய் மற்றும் பால்
நெய்யில் ப்யூட்ரிக் அமிலம் அதிகளவில் உள்ளது. இது குடல் மெட்டபாலிசத்தை மேம்படுத்துவதோடு, மலக்குடலில் சேர்ந்துள்ள மலத்தை எளிதில் வெளியேற்ற உதவுகிறது. நீங்கள் மலச்சிக்கலால் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தால், நெய்யை ஒரு டீஸ்பூன் எடுத்து, ஒரு கப் பாலில் சேர்த்து கலந்து, இரவு தூங்குவதற்கு முன் குடியுங்கள். இதனால் மறுநாள் காலையில் மலம் எளிதில் வெளியேற்றப்பட்டு, வயிறு சுத்தமாகும்.
பச்சை இலைக் காய்கறிகள்
பசலைக்கீரை, ப்ராக்கோலி போன்றவற்றில் நார்ச்சத்து அதிகம் இருப்பதோடு, ஃபோலேட், வைட்டமின் சி மற்றும் வைட்டமின் கே போன்ற சத்துக்களும் அதிகளவில் உள்ளன. இந்த வகையான காய்கறிகளை உணவில் அதிகம் சேர்க்கும் போது, மலமானது எளிதில் மலக்குடல் வழியாக வெளியேற்றப்படும்.
தண்ணீர்
ஒருவருக்கு மலச்சிக்கல் வருவதற்கு குறைவாக நீர் அருந்துவதும் ஓர் முக்கிய காரணமாக இருப்பதால், அந்த மலச்சிக்கலில் இருந்து விடுபட அதிகளவு நீரை அருந்தலாம். அதுவும் வெறும் நீரை மட்டும் குடிக்காமல், நார்ச்சத்து அதிகம் உள்ள உணவுகளையும் அதிகம் உட்கொள்ள வேண்டும்.