“விஜய் அண்ணா… ஒரு தங்கையாக நினைத்து எங்களுக்கு வேலை கொடுங்கள்!” – 21,515 ஆசிரியர்களுக்காக உருக்கமாக பேசிய சசிகலா

“விஜய் அண்ணா… ஒரு தங்கையாக நினைத்து எங்களுக்கு வேலை கொடுங்கள்!” – 21,515 ஆசிரியர்களுக்காக உருக்கமாக பேசிய சசிகலா

“விஜய் அண்ணா… ஒரு தங்கையாக நினைத்து எங்களுக்கு வேலை கொடுங்கள்!” – 21,515 ஆசிரியர்களுக்காக இடைநிலை ஆசிரியர் சசிகலா உருக்கமான கோரிக்கை விடுத்துள்ளார்.

தூத்துக்குடி:

2013-ம் ஆண்டு முதல் ஆசிரியர் தகுதித் தேர்வை எழுதி தொடர்ந்து தேர்ச்சி பெற்றும், 2024-ம் ஆண்டு நடைபெற்ற நியமனத் தேர்விலும் தேர்ச்சி பெற்றும் இதுவரை பணி கிடைக்கவில்லை எனக் கூறி, 21,515 நியமனத் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கும் பணி வழங்க வேண்டும் என இடைநிலை ஆசிரியர் சசிகலா தமிழக முதல்வர் விஜய்க்கு உருக்கமான கோரிக்கை விடுத்துள்ளார்.

நியமனத் தேர்வில் தேர்ச்சி பெற்ற இடைநிலை ஆசிரியர்கள் சார்பில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்க வந்ததாக தெரிவித்த சசிகலா, தங்களது நீண்டகால போராட்டம் குறித்து பேட்டியளித்தார்.

“ஒவ்வொரு முறையும் தேர்ச்சி… வேலை மட்டும் இல்லை!”

சசிகலா கூறுகையில்:

“2013-ம் ஆண்டு முதல் TET Paper-1 தேர்வு எழுதி வருகிறோம். ஒவ்வொரு முறையும் தேர்ச்சி பெற்றுள்ளோம். தமிழ் தகுதித் தேர்விலும் தேர்ச்சி பெற்றுள்ளோம். 2024-ம் ஆண்டு நியமனத் தேர்வு நடத்தப்பட்டது. அதிலும் நாங்கள் தேர்ச்சி பெற்றோம். ஆனால் இத்தனை ஆண்டுகள் கடந்தும் எங்களுக்கு இன்னும் பணி கிடைக்கவில்லை” என வேதனை தெரிவித்தார்.

தற்காலிக ஆசிரியர்களை நியமிக்கக் கூடாது என நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக கூறிய அவர், அதன்பிறகும் தமிழகத்தில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தற்காலிக ஆசிரியர்கள் பணியாற்றி வருவதாக தெரிவித்தார்.

தகுதித் தேர்வு மற்றும் நியமனத் தேர்வில் தேர்ச்சி பெற்ற தங்களைப் போன்ற ஆசிரியர்களுக்கு பணி வழங்காமல் தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கப்படுவது தங்களுக்கு மிகுந்த வேதனையை ஏற்படுத்துவதாகவும் அவர் கூறினார்.

ஆசிரியர் பணிக்காக காத்திருக்கும் பலர் தனியார் பள்ளிகளில் வேலைக்குச் சென்றாலும் குறைந்த ஊதியமே கிடைப்பதாக சசிகலா தெரிவித்தார்.

“தனியார் பள்ளியில் வேலைக்கு சென்றால் ₹6,000 மட்டுமே சம்பளம் கொடுக்கிறார்கள். அதை வைத்து குடும்பத்தை நடத்துவது மிகவும் கஷ்டமாக உள்ளது. நான் ஒரு சிங்கிள் பேரன்ட். என்னைப் போன்றவர்கள் குடும்பத்தை எப்படி நடத்த முடியும்?” என அவர் உருக்கமாக கேள்வி எழுப்பினார்.

வாழ்வாதாரத்திற்காக பல ஆசிரியர்கள் கட்டிட வேலை, கல் தூக்கும் வேலை, ஏரி வேலை மற்றும் 100 நாள் வேலைத்திட்டம் உள்ளிட்ட கூலி வேலைகளுக்குச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

“2013 முதல் காத்திருக்கிறோம்!”

“2013-ம் ஆண்டு முதல் வேலைக்காக காத்திருக்கிறோம். ஒவ்வொரு முறையும் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றுக்கொண்டே இருக்கிறோம். பல ஆண்டுகளாக மனுக்கள் அளித்தும், இதுவரை நிரந்தர தீர்வு கிடைக்கவில்லை.

மனுக்கள் ஏற்கப்பட்டதாகவோ, நிராகரிக்கப்பட்டதாகவோ பதில் வருகிறது. ஆனால் எங்களுக்கு இன்னும் வேலை கிடைக்கவில்லை” என சசிகலா தெரிவித்தார்.

“விஜய் அண்ணா… நம்பி ஓட்டு போட்டிருக்கிறோம்!”

தமிழக முதல்வர் விஜய்க்கு நேரடி வேண்டுகோள் விடுத்த சசிகலா,

“தயவுசெய்து விஜய் அண்ணா... உங்களை நம்பி ஓட்டு போட்டிருக்கிறோம். ஒரு தங்கையாக நினைத்து எங்கள் அனைவருக்கும் வேலை கொடுங்கள்” என உருக்கமாக கேட்டுக்கொண்டார்.

மேலும், நியமனத் தேர்வில் தேர்ச்சி பெற்ற 21,515 ஆசிரியர்கள் இன்னும் பணி நியமனத்திற்காக காத்திருப்பதாகவும், காலம் கடந்ததால் பலர் ஆசிரியர் பணித் துறையையே விட்டு சென்றுவிட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

“21,515 பேரில் 17,000-க்கும் மேற்பட்டோர் பெண்கள்”

நியமனத் தேர்வில் தேர்ச்சி பெற்ற 21,515 பேரில் 17,000-க்கும் மேற்பட்டோர் பெண் ஆசிரியர்கள் என சசிகலா தெரிவித்தார்.

பலர் தற்போது 45 வயதைக் கடந்துவிட்டதாகவும், வயது வரம்பு மற்றும் காலதாமதத்தை கருத்தில் கொண்டு வயது அடிப்படையில் முன்னுரிமை வழங்கி பணி நியமனம் செய்ய வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.

“காலம் மிகவும் கடந்துவிட்டது. பலர் 45 வயதைக் கடந்துவிட்டனர். எனவே, நியமனத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களை வயது அடிப்படையில் முன்னுரிமைப்படுத்தி, காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும்.

கருணை அடிப்படையில் எங்கள் அனைவருக்கும் பணி வழங்கி எங்களது குடும்பங்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்ற வேண்டும்” என சசிகலா தமிழக முதல்வர் விஜயிடம் உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார்.

21,515 ஆசிரியர்களின் பணி நியமனக் கோரிக்கைக்கு தமிழக அரசு என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது? என்ற எதிர்பார்ப்பு தற்போது எழுந்துள்ளது.