எம்.ஜி.ஆர். முதல் விஜய் வரை: ‘விசில்’ அரசியலின் வரலாறும், அதன் பின்னணி அரசியல் கிண்டல்களும்..!

எம்.ஜி.ஆர். முதல் விஜய் வரை: ‘விசில்’ அரசியலின் வரலாறும், அதன் பின்னணி அரசியல் கிண்டல்களும்..!

தமிழ் திரையுலகிலும் அரசியலிலும் ரசிகர்களின் ‘விசில்’ சத்தம் தனி அடையாளமாக இருந்து வந்துள்ளது. ஒருகாலத்தில் திரையில் எம்.ஜி.ஆர். தோன்றும் போதெல்லாம், திரையரங்குகளை அதிரவைக்கும் விசில் சத்தமே அவரது அரசியல் உயர்வுக்கும் அடித்தளமாக அமைந்தது.

‘மக்கள் திலகம்’ என ரசிகர்களால் கொண்டாடப்பட்ட எம்.ஜி.ஆர்., சினிமா மூலமாக பெண்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரையும் கவர்ந்து, இறுதியில் ‘புரட்சித் தலைவர்’ என அரசியல் வரலாற்றில் இடம் பிடித்தார். அவருக்கு எதிராக பரப்பப்பட்ட விமர்சனங்கள் மக்களிடையே பெரிதாக எடுபடாமல் போனதற்கும், இந்த ரசிகர் ஆதரவே முக்கிய காரணமாக இருந்தது.

1970-களில் வெளியான மாணவன் திரைப்படத்தில் இடம்பெற்ற “விசிலடிச்சான் குஞ்சுகளா…” என்ற பாடல் அக்காலகட்டத்தில் பெரும் வரவேற்பை பெற்றது. மாஸ் ஹீரோக்களின் தீவிர ரசிகர்களைக் குறிக்கும் சொல்லாக ‘விசிலடிச்சான் குஞ்சுகள்’ என்ற சொல் அப்போது வழக்கில் இருந்தது. 1980-களுக்குப் பிறகு அந்த சொல் மெல்ல வழக்கொழிந்து போனது.

இந்நிலையில், தற்போதைய மாஸ் நடிகராக உள்ள விஜய் அரசியலுக்கு வந்துள்ளதும், அவரது கட்சிக்கு தேர்தல் ஆணையம் ‘விசில்’ சின்னத்தை ஒதுக்கியுள்ளதும் அரசியல் வட்டாரங்களில் கவனத்தை ஈர்த்துள்ளது. கட்சி தொடங்கிய உடனே, விசிலை சின்னமாக கொண்டு விளம்பரப்படுத்தும் பணிகளில் அவரது ஆதரவாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். பள்ளி செல்லும் சிறுவர்கள் முதல் பொதுமக்கள் வரை விசில்கள் விநியோகிக்கப்படுவது, சமூக வலைதளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.

“விசில் போடுவோம்” என்ற அறிவிப்பும் வெளியாகியுள்ள நிலையில், வரும் நாட்களில் விசிலும் விசில் சத்தமும் அரசியல் மேடைகளில் முக்கிய அடையாளமாக மாறும் சூழல் உருவாகியுள்ளது. இதன் மூலம், ஒருகாலத்தில் வழக்கிலிருந்த ‘விசிலடிச்சான் குஞ்சுகள்’ என்ற சொல் மீண்டும் புழக்கத்திற்கு வருமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

ஆனால் அரசியல் விமர்சகர்கள் இதனை வேறுபட்ட கோணத்தில் பார்க்கின்றனர். எம்.ஜி.ஆர். காலத்து ரசிகர் அரசியலும், இன்றைய விசில் அரசியலும் ஒன்றல்ல என்பதே அவர்களின் வாதம். சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்து, பாடல்கள், வசனங்கள், மக்கள் தொடர்பு ஆகியவற்றின் மூலம் தமிழக அரசியலையே மாற்றியவர் எம்.ஜி.ஆர். மக்கள் அவரை ‘வாத்தியார்’ என ஏற்றுக் கொண்டனர். “வாங்கய்யா வாத்தியாரய்யா” என்ற பாடல் மக்களின் உணர்வுகளை பிரதிபலித்ததாகவும் நினைவுகூரப்படுகிறது.

மேலும், ‘விசிலடிச்சான் குஞ்சுகளா’ பாடலின் அடுத்த வரியான “வெம்பிப் பழுத்த பிஞ்சுகளா” என்பது கிண்டல் கலந்த அர்த்தம் கொண்டதாகவும் அரசியல் விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இதன் பின்னணி புரியாமல், அந்த சொற்களை மீண்டும் அரசியல் அடையாளமாக மாற்ற முயன்றால், அது எதிர்மறை விளைவுகளை உருவாக்கும் அபாயமும் இருப்பதாக அவர்கள் எச்சரிக்கின்றனர்.

விசில் ஒரு சின்னமா, அல்லது அரசியல் விமர்சனங்களுக்கான புதிய ஆயுதமா என்பதை வரும் கால அரசியல் நிகழ்வுகளே தீர்மானிக்கும் என்பதே தற்போதைய நிலை.