திருச்செந்தூர் பகுதியில் சோழ வாரிசுகள் பற்றிய அறிய தகவல்கள் இடம்பெற்ற சோழர் கால‌ வரலாற்று ஓலைச்சுவடி கண்டுபிடிப்பு!

திருச்செந்தூர் பகுதியில் சோழ வாரிசுகள் பற்றிய அறிய தகவல்கள் இடம்பெற்ற சோழர் கால‌ வரலாற்று ஓலைச்சுவடி கண்டுபிடிப்பு!

திருச்செந்தூர் பகுதியில் சோழ வாரிசுகள் பற்றிய அறிய தகவல்கள் இடம்பெற்ற சோழர் கால‌ வரலாற்று ஓலைச்சுவடி கண்டுபிடிப்பு!

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் பகுதியில் சோழ வாரிசுகள் பற்றிய அறிய தகவல்கள் இடம்பெற்ற சோழர் கால‌ வரலாற்று ஓலைச்சுவடி கிடைத்துள்ளது. 

  19 –ஆம் நூற்றாண்டில் பதிப்பிக்கப்பட்ட ஓலைச் சுவடிகள்  வழியாகத்தான் தமிழரின் பழம் பெருமை உலகிற்குத் தெரிந்தது. எனவே இத்தகைய ஓலைச்சுவடிகளைத் திரட்டி, பாதுகாத்து, பதிப்பிக்க வேண்டியதன் அவசியத்தை நாம் உணர வேண்டியது அவசியமாகும்.கடந்த 50-ஆண்டுகளில் சுவடித் திரட்டல் பணியும் பதிப்புப் பணியும்முறையாக நடைபெறவில்லை என்று கூறலாம். இச்சூழலில் கடந்த 20 ஆண்டுகளாகத் தனிநபராகச் சுவடிகளைத் திரட்டித் தொகுக்கும் பணியையும் சுவடிகளைப் பதிப்பிக்கும் பணியையும் சுவடியியலை கற்பிக்கும் பணியையும் தொடர்ந்து செய்து வருபவர் பேராசிரியர் சு.தாமரைப் பாண்டியன் ஆவார். 

இவர் கள ஆய்வின் மூலம்  ஓலைச் சுவடிகளையும் தாள் சுவடிகளையும் கண்டுபிடித்து சேகரித்து வருகிறார்.இவர் சமீபத்தில் திருச்செந்தூர் பகுதியில் சுவடிகள் தேடிக் கள ஆய்வுப் பணியை  மேற்கொண்ட பொழுது ஆறுமுகநேரி பகுதியில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த "ஆதி பூர்வீக மண்டல் காட்டு ராசாவாகிய மூலப்புலிக்கொடியோன் பூர்வீக வரலாறு" எனும் ஓலைச்சுவடியைக் கண்டுபிடித்துள்ளார். இந்த ஓலைச்சுவடியின் சிறப்பு குறித்து அறிய அவரைத் தொடர்பு கொண்டோம். அப்போது அவர் கூறியதாவது:

 சென்னையில் பணியாற்றிக் கொண்டு  அரிதாகக் கிடைக்கும் விடுமுறை நாட்களிலும் தொடர்ந்து சுவடிகளைத் தேடித் தொகுத்துப் பதிப்பித்து வருகிறேன். கடந்த முறை எனது சொந்த ஊரான சிவசுப்பிரமணியபுரம் சென்றிருந்தபொழுது திருச்செந்தூர் அருகில் உள்ள மானாடு பகுதியில் சுவடிகள் உள்ளனவா என்று தேடினேன். அப்படிச் சுவடிகள் தேடிக் கொண்டிருக்கும் பொழுது தமிழ் ஆர்வலர் நூர்சாகிபுரம் சு.சிவக்குமார் அவர்களின் வழிப்படுத்துதலின் அடிப்படையில் ஆறுமுகநேரி பகுதியைச் சேர்ந்த ஆய்வு அறிஞர் த.தவசி முத்துமார‌ன் அவர்களைச் சந்தித்தேன். அவர் ஒரு ஒய்வு பெற்ற ஆசிரியர்.அவரிடம் என்னை அறிமுகப்படுத்திக் கொண்டு நான் பதிப்பித்திருந்த "கதைப் பாடல் சுவடித் திரட்டும் பதிப்பும்" எனும் தலைப்பில் அமைந்த 30 கதைப் பாடல் சுவடிகளின் தொகுப்பான 3 -தொகுதி நூல்களை அவரிடம் வழங்கினேன். அந்த நூல்களைப் புரட்டிப் பார்த்து விட்டு பாராட்டினார்.

பின்பு என் மீது ஏற்பட்ட நல்லெண்ணம் காரணமாக அவர் தன்னிடம் இருந்த  ஆதிபூர்வீக மண்டல் காட்டு ராசாவாகிய மூலப்புலிக்கொடியோன் பூர்வீக வரலாறு, பெருமாள்சாமி கதை, பத்திரகாளி அம்மன் கதை, மூர்த்தி மாடசாமி கதை, சாஸ்தா கதை, சிவபுராணம், பார்வதியம்மன் கதை, அருச்சுனன் தவசு, இசக்கியம்மன் கதை, மந்திர ஏடு, சித்த மருத்துவ ஏடு, மாந்திரிகம் , சோதிடம் உள்ளிட்ட பொருண்மையிலான 14அரிய ஓலைச்சுவடிகளைப்  பெருந்தன்மையுடன் என்னிடம் வழங்கினார். அவர் வழங்கிய சுவடிகளில் நாட்டார் தெய்வ வரலாறும்

வட்டார வரலாறும் அதிகமாக இருந்தன. ஆனால் அவர் தந்த சுவடிகளில் மண்டல் காட்டு ராசாவாகிய மூலப்புலிக்கொடியோன் பூர்வீக வரலாறு சுவடி மிக முக்கியமானது என்பதைப் பிரதி செய்த பொழுது அறிந்தேன். சுவடியில் காலம் மற்றும் நூலை இயற்றிய ஆசிரியர் பற்றிய குறிப்புகள் எதுவும் காணப்படவில்லை. எனினும் பிரதி ஓலைச்சுவடியின் பழமை வடிவ நிலை அடிப்படையில் சுவடி எழுதப்பட்டது சுமார் 100 ஆண்டுகளுக்கு முற்பட்டதாக இருக்கலாம் எனத் தோன்றுகிறது. மூலச்சுவடியின் காலம் அதற்கும் முந்தையது என்பதில் ஐயம் இல்லை. எனினும் நூலில் உள்ள வரலாறுகள் நடைபெற்ற காலம் 11 ஆம் நூற்றாண்டு முதல் 18 ஆம் நூற்றாண்டு வரையிலானது ஆகும்.

 சோழர் குல வலங்கைசான்றோர் தோற்றவரலாறு:

சோழர் குல வலங்கை சான்றோர் மக்களின் தோற்றவரலாறு இச்சுவடியின் முதல் பகுதியில் கூறப்பட்டுள்ளது. வித்யாதர முனிவர் சோழர் குல வலங்கைசான்றோர் மக்களின் ஆதி மூதாதையர் ஆவார். அவரின் ஏழு புதல்வர்களையும் காளி வளர்த்து வீரக் கலைகளைக் கற்றுக் கொடுத்து ஆளாக்குகிறாள். காளி தான் வளர்த்து ஆளாக்கிய ஏழு புதல்வர்களுக்கும் நிருபதிராசன் மகள்களை மணமுடித்து வைக்கிறாள். எழுவரும் வலங்கை சான்றோர் குலமாக உருவாகின்றனர். வலங்கைச் சான்றோர் சோழனை எதிர்த்த சம்பரனை வெற்றி கொள்கின்றனர். வணிகச் செட்டியார்களுக்கு உதவி செய்து "செட்டித் தோளேறும் பெருமாள் " என்று பட்டம் பெறுகின்றனர். சோழனுக்காக இலங்கை மன்னனையும் வெற்றி பெறுகின்றனர்.

அதற்காகச் சோழனிடம் வீர விருதுகளும், பாராளும் சீமையில் பங்கும் பெறுகின்றனர். காவிரி அணை உடைப்பை அடைக்க சோழன் கட்டளையிட்ட போது வலங்கைச் சான்றோர் மண் குட்டையைத் தொட மறுக்கின்றனர். கோபம் கொண்ட சோழன் இரண்டு வலங்கையரின் தலையை யானையை ஏவி இடறச் செய்கிறான். தனது புத்திரர்கள் கொல்லப்பட்டதை அறிந்த காளி சோழ நாட்டில் மழை பொழியாமல் போகச் சாபமிடுகிறாள். பன்னிரெண்டு ஆண்டுகள் சோழ நாட்டில் பெரும் பஞ்சம் ஏற்பட்டது. இப்படி இருக்கையில் வலங்கை சான்றோர் ஐந்து ராசாக்களாகப் பாரினை வெகுகாலம் செங்கோல் செலுத்தி பரம்பரையாக மனுநீதி தவறாமல் ஆண்டு வந்தனர். 

அத்திமுடிச்சோழன் வரலாறு:

அத்திமுடிச் சோழன் என்பவன் மைந்தன் இல்லாததால் அரச மரபை மீறி தனது கூத்தியாள் மகனை நாடாள வைக்க முடிவு செய்கிறான். பிற நாட்டுமன்னர்கள் சத்திரிய தர்மம் மீறி நடக்க வேண்டாம் என்று சோழனுக்கு அறிவுரை கூறுகின்றனர். ஆனால் சோழன் அதனை கேட்கவில்லை. இதனால் கோபம் கொண்ட மன்னர்கள் அத்திமுடிச் சோழனை போரில் வென்று சோழர் குல வலங்கை சான்றோனை முடிசூட்டி சோழ நாட்டை அரசாளச் செய்தனர்.

அத்திமுடிச் சோழன் விஜய நகர வேந்தனிடம் உதவி கோருதல்:

அத்திமுடிச் சோழன் நாடிழந்ததை எண்ணி வருந்தினான். அப்போது மந்திரி "முகமதியரை விரட்ட விஜயநகர வேந்தன் கிருஷ்ணதேவராயனுக்கு உபதுணையாய் இருந்தீர்கள். எனவே அவரிடம் உதவி கேட்டு நாட்டை மீட்டுக் கொள்ளலாம் "என்று ஆலோசனை கூறுகிறான். அத்தி முடிச் சோழனும் விஜயநகர வேந்தனைக் கண்டு உதவி கேட்கிறான். விஜயநகர வேந்தனும் தனது படைத்தளபதி  நாகம நாயக்கன் தலைமையில் ஒரு படையை  அனுப்பி சோழர் குல வலங்கை சான்றோனை அடக்கி அத்திமுடிச்சோழன் மகனை மீண்டும் நாடாளச் செய்தான்.

தொண்டை மண்டலம் பகுதியை ஆண்ட புலிக்கொடியோனை நாகம நாயக்கன் வெற்றி பெறுதல் :

நாகம நாயக்கன் முதலியார் படையுடன் தொண்டை மண்டலம் நோக்கிச்சென்றான். வலங்கை சான்றோர் குலத்து மண்டல்காட்டு ராசன் புலிக்கொடியோன் நாகம நாயக்கன் படையை  எதிர்த்துப் போர் செய்தான். தனது படை வீரர்கள் சிலர் எதிரிப் படையுடன் சேர்ந்து கொண்டனர். நாகம நாயக்கனின் சூழ்ச்சியானபோர் முறையினால் புலிக்கொடியோன் மாண்டான். நாகமநாயக்கன் நாடாண்ட வலங்கை சான்றோர் மக்களிடம்

பகுதிப் பணம் கட்டுங்கள் இல்லை எனில் நாட்டை விட்டு வெளியேறுங்கள் என்று கூறினான். நாடாண்ட ராச மன்னர் மக்கள் பகுதிப் பணம் கட்ட மறுத்தனர். மேலும் நமது குடியைச் சேர்ந்த சான்றோர் குல மக்கள் ஏழு பேர் கூன்பாண்டியனுக்குப் பின் ராச்சியத்தை ஆண்டு வருகின்றனர். எனவே அவர்கள் துணையுடன் நம் நாட்டை மீண்டும் மீட்டுக் கொள்ளலாம் என்று ஆலோசித்து தன் பரிவாரங்களுடன் தென்பகுதிக்குக் குடிபெயர்ந்தனர் .

மகமதியர் படை யெடுப்பும் பாண்டியர் வீழ்ச்சியும்:

கொல்லம் ஆண்டு 292 ( கி.பி.1116) ல் பூதப்பாண்டியன் கொல்லப்பட்டான். கோட்டாறும், நாஞ்சில் நாடும் கூபர்கோன் சேர்த்துக் கொண்டான். கொல்லம் ஆண்டு 483 (கி.பி. 1307) ல் துலுக்க தேசத்துராசா திருப்புவன பாண்டியனையும், மதுரை பாண்டியனையும், கொற்கை பாண்டியனையும் கொன்று நாட்டை கொள்ளையடித்தான். இதனால் நாட்டில் அமைதி சீர்குலைந்தது. கோயில்களும் கொள்ளையடிக்கப்பட்டன. ஒட்டப்பிடாரம் பாண்டியனும் வள்ளியூர் பாண்டியனும் தென்காசிபாண்டியனும் கன்னட தேசத்தார் உதவியுடன் முகமதியரை விரட்டியடித்தனர்.

வீரபாண்டியனை விஜய நகர அரசு வெற்றி பெறுதல்:

வள்ளியூர் பகுதியை ஆண்ட குலசேகர பாண்டியன் கன்னடியன் மகளை மணமுடிக்க மறுத்ததால் போர் மூண்டது. இந்தத் தருணம் நல்லதென்று கருதிய விஜயநகர வேந்தன் பாண்டிய நாட்டின் மேல் படையெடுத்தான். ஆனால் வெற்றி பெற முடியவில்லை. எனவே விஐய நகர வேந்தன் ஒரு உபாய அறிக்கை செய்தான்.

''வீரபாண்டிய மன்னா!

நாம் நாடாள சேனை படை அழியவேண்டாம். எங்களில் ஒருவளையும் உங்களில் ஒருவனையும் வாள் சண்டைக்கு விடுவோம். வென்றவன் ராசாவுக்கு நாடு சொந்தம்" என்று கூறினான். வீரபாண்டியனும் சம்மதித்தான். வீரபாண்டியனின் வீரன் தோற்றதால் நாடிழந்த பாண்டியன் தனது பரிவாரங்களுடன் பூதப்பாண்டி நாட்டில் சென்று குடியேறினான்.

சோழர் குலச் சான்றோர்கள் பூதப்பாண்டி நாட்டில் குடியேறுதல்:

சோழர் குலத்து புலிக்கொடியோன் மக்கள் வள்ளியூர் குலசேகரபாண்டியன் கன்னடியருடன் போர் பூசலில் ஈடுபட்டதால் அவனிடம் உதவி பெற முடியாமல் போனது. எனவே அவர்கள் ஒட்டப்பிடாரம் வீரபாண்டியனிடம் சோழ நாட்டை மீட்க உதவி கேட்டனர். அச்சூழலில் வீரபாண்டியனும் தனதுநாட்டை இழந்தான். இதனால் உதவி கிடைக்காத சோழர் குலச் சான்றோரும் பூதப்பாண்டி நாட்டில் சென்று குடியேறினர்.

முகமதியர் விஜயநகர ராஜ்ஜியத்தை அழித்தல்:

வெற்றிமேல் வெற்றி கண்ட விஜயநகர வேந்தன் மலையாள நாட்டையும் வென்று அரசாண்டான். கொல்லம் ஆண்டு  741-ல் (கி.பி.1565) முகமதியர் விஜயநகர ராச்சியத்தை அழித்து ஒழித்தனர்.அத்தி முடிச்சோழனும் நாட்டை இழந்தான்.

மார்த்தாண்டவர்மா சோழர் குலச்சான்றோருக்கு செய்த கொடுமைகள்:

மார்த்தாண்டவர் மாவுக்கும் ராமன், பப்பு தம்பிகளுக்கும் நடந்த வாரிசுரிமைப் போரில் பூதப்பாண்டி பகுதியில் குடியேறிய பாண்டியர் குலத்தவரும் வலங்கை சான்றோர் குலத்தவரும் ராமன் தம்பி, பப்பு தம்பிக்கு ஆதரவாக நின்று படை நடத்தினர். பல போர்கள் செய்து மார்த்தாண்ட வர்மாவை அழிக்க முயன்றனர். ஆனால் மார்த்தாண்டவர்மா சூழ்ச்சி செய்து தம்பிமாரைக் கொன்றார். பின்னர் தம்பிமாருக்கு உதவிய பாண்டியர் குலத்தவர்களுக்கும் சோழர் குல வலங்கை சான்றோர்களுக்கும் சொல்லொண்ணா கொடுமைகள் செய்தான். இதனால் அங்கு வாழ விரும்பாத சோழர் குல புலிக்கொடியோன் வம்சாவழியினர் திருச்செந்தூர் பகுதியில் சென்று குடியேறினர். அங்கு அதிகாரம் செய்த முகமதியனை விரட்டியடித்தனர்.

மணக்காட்டில் மறவரை காவல் வைத்து ஆண்டனர் . பெரும் நிலவுடமையாளர் ஆயினர்.முருகன் கோயிலில் எந்நாளும் தீபம் ஏற்ற 20 குறுணிநஞ்சை எழுதி வைத்தனர். விசாகத்திற்கு தரிசிக்க வரும் பக்தர்கள் தங்கிட ஒரு மடமும் கட்டி வைத்தனர் என்று பல செய்திகளை ஓலைச்சுவடி  குறிப்பிடுகிறது.

எனக்கு கிடைத்துள்ள வரலாற்றுச் சுவடி புலிக்கொடியோனின் வம்சாவழியினரின் சு வரலாற்றை சுருக்கமாகக் கூறுகிறது. ஆனால் இதே வரலாற்றைப் பேசும் "ஆதி பூர்வ மண்டங்குடி நாட்டு மண்டக்கென்ற திரிலோசனன் வரலாறு" என்னும் நூல் மேற்கூறிய வரலாறுகளை விரிவாகவும் கால அடிப்படையிலும் தெளிவாகவும் கூறுகிறது. இந்நூலை இயற்றியவர் வித்துவான் ச.செந்தமிழ்ச்செல்வன் என்பதை அறிய முடிகிறது. கிடைத்துள்ள சுவடி சோழர் வரலாற்றுடன் தொடர்புடையது என்பதால் வரலாற்று முக்கியத்துவமானதாக அமைகிறது.