பி.எம்.கிசான் முதல் பயிர் காப்பீடு வரை... விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு!

பி.எம்.கிசான் முதல் பயிர் காப்பீடு வரை... விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு!

தூத்துக்குடி: பி.எம்.கிசான் திட்ட நிதியுதவி உள்ளிட்ட வேளாண்மை சார்ந்த அரசு நலத்திட்டங்களின் பயன்களைப் பெற, விவசாயிகள் விவசாய அடையாள எண் பெறுவது அவசியம் என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் விவசாயிகளுக்கு விவசாய அடையாள எண் பதிவு செய்யும் பணிகள் வேளாண்மைத் துறை மூலம் நடைபெற்று வருகின்றன. பட்டா வைத்துள்ள விவசாயிகள், வேளாண்மை மற்றும் தோட்டக்கலைத் துறை அலுவலர்களிடம் தேவையான விவரங்களை வழங்கி அடையாள எண்ணை பதிவு செய்து வருகின்றனர்.

பல்வேறு அரசு உதவிகளுக்கு கட்டாயம்

விவசாயிகளுக்கான பி.எம்.கிசான் நிதியுதவி, பயிர்க்கடன், பயிர் காப்பீடு, உர மானியம் உள்ளிட்ட வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்ந்த பல்வேறு அரசு நலத்திட்டங்களைப் பெற விவசாய அடையாள எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

வேளாண்மைத் துறை மூலம் விவசாயிகளின் நில உடமை ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு, வேளாண் அடுக்ககம் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு, விவசாயிகளுக்கு தனிக் குறியீட்டு எண் வழங்கப்பட்டு வருகிறது.

எங்கே பதிவு செய்யலாம்?

விவசாயிகள் தங்களது ஆதார் எண், ஆதாருடன் இணைக்கப்பட்ட கைப்பேசி எண் மற்றும் நில உடமை விவரங்களுடன், தங்கள் பகுதியில் உள்ள வேளாண்மை அல்லது தோட்டக்கலைத் துறை அலுவலகத்தை அணுகலாம்.

மேலும், பொது சேவை மையத்திலும் கட்டணமின்றி விவசாய அடையாள எண்ணுக்கான பதிவை மேற்கொள்ளலாம்.

⚠️ ஒரு பட்டா மட்டும் பதிவு செய்திருந்தால் கவனம்!

ஏற்கனவே விவசாய அடையாள எண் பெற்ற சில விவசாயிகள், தங்களிடம் உள்ள பல பட்டா எண்களில் ஒரு பட்டா எண்ணை மட்டும் பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உதாரணமாக, ஒரு விவசாயிக்கு நான்கு பட்டா எண்கள் இருந்தால், அதில் ஒரு பட்டா மட்டும் பதிவு செய்யப்பட்டிருக்கலாம். இவ்வாறு உள்ள விவசாயிகள் விடுபட்டுள்ள அனைத்து பட்டா எண்கள் மற்றும் நில விவரங்களையும் வேளாண்மை மற்றும் தோட்டக்கலைத் துறை அலுவலர்கள் மூலம் பதிவு செய்ய வேண்டும்.

“நம்ம வயல்” செயலியில் நில விவரங்களை சரிபார்க்கலாம்!

விவசாய அடையாள எண் பெற்றவர்கள் “நம்ம வயல்” செயலி மூலம் தங்களது வயல்களின் சாகுபடி விவரங்களை மின்னணு பயிர் கணக்கெடுப்பில் பதிவு செய்ய முடியும்.

இந்த செயலி மூலம் விவசாயிகள் தங்களது செல்போன் வாயிலாகவே மின்னணு பயிர் கணக்கெடுப்பில் தன்னார்வலர்களாக பங்கேற்க முடியும்.

மேலும், செயலியில் உள்நுழைந்தவுடன் தங்களது விவசாய அடையாள எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ள நிலங்கள் மற்றும் உட்பிரிவுகளின் விவரங்களை பார்க்க முடியும். ஏதேனும் நிலம் அல்லது உட்பிரிவு விடுபட்டிருந்தால் அதை உடனடியாக கண்டறிந்து, வேளாண்மைத் துறை மூலம் விவரங்களைப் புதுப்பிக்க நடவடிக்கை எடுக்கலாம்.

விவசாய அடையாள எண் பதிவு செய்வது தொடர்பான கூடுதல் தகவல்களுக்கு, அந்தந்த வட்டார வேளாண்மை உதவி இயக்குநர்கள் மற்றும் தோட்டக்கலை உதவி இயக்குநர்களை விவசாயிகள் அணுகலாம்.

விவசாய அடையாள எண் பெறுவதற்கு இதுவே இறுதி வாய்ப்பு என்பதால், விவசாயிகள் உடனடியாக பதிவு செய்து அரசு நலத்திட்டங்களின் பயன்களைப் பெற வேண்டும் என மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் கேட்டுக்கொண்டுள்ளார்.