கோவில்பட்டியில் காலாவதியான 2000 கிலோ மைதா பறிமுதல்: 2 கடைகளுக்கு சீல் வைப்பு!
கோவில்பட்டியில் காலாவதியான 2000 கிலோ மைதா மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்பனை செய்த 2 கடைகளுக்கு உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.
கோவில்பட்டியில் காலாவதியான 2000 கிலோ மைதா மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்பனை செய்த 2 கடைகளுக்கு உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் நடைபெறும் உள்ளூர் செய்திகள் முதல் உலக செய்திகள் வரை தெரிந்து கொள்ள... எங்களது ஆண்டராய்ட் ஆப் டவுன்லோட் செய்யுங்கள்... CLICK HERE..
சுகாதாரத்துறையின் செயலாளர் ககன்தீப் சிங் பேடி, தமிழ்நாடு உணவு பாதுகாப்பு ஆணையர் லால்வேனா மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் கி.செந்தில்ராஜ் ஆகியோரது ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலின் பேரில் தூத்துக்குடி உணவு பாதுகாப்பு மாவட்ட நியமன அலுவலர் ச.மாரியப்பன் தலைமையில், கோவில்பட்டி ஒன்றிய பொறுப்பு உணவு பாதுகாப்பு அலுவலர் ஜோதிபாஸூ ஆகியோர் அடங்கிய குழுவினர், கோவில்பட்டி - குருமலை சாலையில் உள்ள அனுகிரஹா என்ற மாவு மில்லினை ஆய்வு செய்தனர். அப்போது அந்நிறுவனத்தில் மறுபொட்டலமிட 2000 கிலோ மைதா இருப்பு வைக்கப்பட்டிருந்ததும், அது 25.05.2023 அன்றே காலாவதியானதும் கண்டறியப்பட்டது.
எனவே, பொதுமக்களுக்கு விற்பனைக்குச் சென்றுவிடக்கூடாது என்பதற்காக, அம்மைதா உடனடியாக பறிமுதல் செய்யப்பட்டது. அதன் மதிப்பு கிட்டத்தட்ட 60,000 ரூபாயாகும். மேலும், அந்நிறுவனத்தின் உணவு பாதுகாப்பு உரிமமும் காலாவதியாகியிருந்ததும் கண்டறியப்பட்டது. எனவே, பொதுமக்களின் பொது சுகாதார நலனை முன்னிறுத்தியும், உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் (உணவு வணிக உரிமம் மற்றும் பதிவு) ஒழுங்குமுறைகளின் கீழும் அந்நிறுவனத்தின் இயக்கத்தினை நிறுத்தி வைத்து ஆணை பிறப்பிக்கப்படும்.
அதுபோல், கோவில்பட்டி புதிய பேருந்து நிலையம் அருகில் ஜெயபால் என்பருக்குச் சொந்தமான சுபா டீ ஸ்டால் என்ற கடையிலும், முருகன் என்பவருக்குச் சொந்தமான ஶ்ரீ செல்வம் டீ ஸ்டால் என்ற கடையிலும் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை கலந்த உணவுப் பொருட்கள் தலா 3 கிலோ மற்றும் 1/2 கிலோ என்ற அளவிலும், அச்சிட்ட காகிதங்களும், அனுமதிக்கப்படாத ப்ளாஸ்டிக் பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டதால், பொதுமக்களின் பொது சுகாதார நலனை முன்னிறுத்தி, இரண்டு டீ கடைகளும் உடனடியாக மூடி முத்திரையிடப்பட்டன.இவர்களிடத்தில் விசாரணை மேற்கொண்டு, அபராதம் விதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
வணிகர்களுக்கு ஒரு எச்சரிக்கை:
உணவு பாதுகாப்பு உரிமம் இல்லாமலோ அல்லது காலாவதியாகிய பின்னரோ உணவு வணிகம் புரிவது என்பது சட்ட விதிமீறல் என்பதால் உணவு பாதுகாப்புத் துறையால் உணவு வணிக நிறுவனம் மூடப்படும் என்பதுடன், ஐந்து லட்சம் ரூபாய் வரையில் அபராதமும், சிறை தண்டனையும் நீதிமன்றத்தால் விதிக்கப்பட வாய்ப்புள்ளது. எனவே, அனைத்து உணவு வணிகர்களும் https://foscos.fssai.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பித்து உணவு பாதுகாப்பு உரிமத்தினைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.
மேலும், உணவு பாதுகாப்பு உரிமம் பெற்றால் மட்டும் போதாது. உணவு வணிக வளாகத்தினை உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டம் 2006-ன் விதிமுறைகளைப் பின்பற்றி சுகாதாரமாக வைத்திடல் வேண்டும். தவறினால், இது போன்ற கடும் சட்ட நடவடிக்கைகளுக்கு உள்ளாக நேரிடும் என்று எச்சரிக்கப்படுகின்றது. மேலும், எந்தவொரு வணிகரும் தடை செய்யப்பட்ட உணவுப் பொருட்களை விற்பனை செய்யக்கூடாது என்றும், மீறினால் கடை உடனடியாக சீல் வைக்கப்படும் என்றும் எச்சரிக்கப்படுகின்றது.
உணவுப் பொருட்களின் தரங்கள் குறைபாடு மற்றும் கடையின் சேவை குறைபாடு குறித்து, நுகர்வோர்கள் புகராளிக்க விரும்பினால், 9444042322 என்ற மாநில உணவு பாதுகாப்புத் துறையின் எண்ணிற்கோ அல்லது உணவு பாதுகாப்புத் துறையின் புகார் செயலி மூலமாகவோ அல்லது https://foodsafety.tn.gov.in என்ற இணையதளம் மூலமாகவோ புகார் அளிக்கலாம். புகார் அளிப்பவரது ரகசியங்கள் காக்கப்படும் என தூத்துக்குடி மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் ச.மாரியப்பன் தெரிவித்துள்ளார்.