தூத்துக்குடியில் 2,007 சுமங்கலிகள்... பிரம்மாண்ட வரலட்சுமி பூஜை!

தூத்துக்குடியில் 2,007 சுமங்கலிகள்... பிரம்மாண்ட வரலட்சுமி பூஜை!

தூத்துக்குடி: அருள்மிகு பாகம்பிரியாள் உடனுறை ஸ்ரீ சங்கர ராமேஸ்வரர் திருக்கோவிலில், ஸ்ரீ வரலட்சுமி விரதத்தை முன்னிட்டு 2,007 சுமங்கலிப் பெண்கள் பங்கேற்ற பிரம்மாண்ட சுமங்கலி பூஜை வெகுவிமரிசையாக நடைபெற்றது.

சேவா பாரதி பண்பாட்டு வகுப்பு ஆசிரியர்களின் ஆண்டு விழாவை முன்னிட்டு நடைபெற்ற இந்த சிறப்பு பூஜையில், கணவனின் நீண்ட ஆயுள், நல்ல ஆரோக்கியம், தொழில் மற்றும் குடும்ப வளர்ச்சி வேண்டியும், திருமண வயதில் உள்ள பெண்களுக்கு நல்ல வரன் அமைய வேண்டியும் சிறப்பு பிரார்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டன.

விழாவில் பங்கேற்ற 2,007 சுமங்கலிப் பெண்களுக்கும் தேங்காய், பழம், புடவை, மஞ்சள் கயிறு மற்றும் குங்குமம் உள்ளிட்டவை பிரசாதமாக வழங்கப்பட்டன.

பெண்கள் வெள்ளிச் செம்பில் தேங்காய் வைத்து சிறப்பு வழிபாடு செய்த பின்னர், தங்களது திருமாங்கல்யத்தை அணிந்து கொண்டனர். தொடர்ந்து அருள்மிகு அம்பாளுக்கு சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றன.

இந்நிகழ்விற்கான அனைத்து ஏற்பாடுகளையும் சேவா பாரதி பண்பாட்டு வகுப்பு ஆசிரியர்கள் சங்க மாவட்டத் தலைவர் காளிராஜ், செயலாளர் ராமச்சந்திரன், ஒருங்கிணைப்பாளர் வெண்ணிமாலை உள்ளிட்டோர் சிறப்பாக மேற்கொண்டனர்.