எட்டயபுரம் அருகே கால்வாயில் வேன் கவிழ்ந்து விபத்து : 14 பேர் படுகாயம்!
எட்டயபுரம் அருகே கோவிலுக்கு சாமி கும்பிட சென்றபோது பாலத்தில் மோதி கால்வாயில் வேன் கவிழ்ந்தது. இதில் 14 பேர் படுகாயம் அடைந்தனர்.
மதுரை கீழவைத்தியநாதபுரம் தமிழன் தெருவை சேர்ந்தவர் ஈஸ்வரன். இவர் தனது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் என 25 பேருடன் தூத்துக்குடி மாவட்டம் குறுக்குச்சாலை அருகே கொல்லம் பரம்பில் இருக்கும் பத்திரகாளியம்மன் கோவிலுக்கு சாமி கும்பிடுவதற்காக நேற்று அதிகாலை 4 மணி அளவில் ஒரு வேனில் புறப்பட்டு வந்தனர். வேனை அதே பகுதியைச் சேர்ந்த வேல்முருகன் (47) என்பவர் ஓட்டி வந்துள்ளார்.
அதிகாலை 6 மணியளவில் மதுரை - தூத்துக்குடி நெடுஞ்சாலையில் எட்டயபுரம் போலீஸ் நிலையம் அருகே வந்தபோது வேன் திடீரென நிலை தடுமாறி சாலையோரத்தில் உள்ள பாலத்தின் சுற்றுச்சுவரில் மோதி, கால்வாயில் விழுந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் வேனில் இருந்த ஈஸ்வரன், ராமலட்சுமி (40), நவீன் பாண்டி (19), யுவராஜ் (10), சுபஸ்ரீ (15), ஷாலினி (20), பரமேஸ்வரன் (9), வித்யா சங்கர், வித்யா (29), சண்முகக்கனி (80), புஷ்பம் (60), முருகேஸ்வரி (50), ரூபன் சக்கரவர்த்தி (8), பெருமாள் (53) ஆகிய 14 பேர் படுகாயம் அடைந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த எட்டயபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். காயம் அடைந்தவர்களை மீட்டு எட்டயபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்ைச அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.மேலும், இந்த விபத்து குறித்து எட்டயபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.