கருணை நியமனம் குறைப்பு உள்ளிட்ட 9 கோரிக்கைகள்: தூத்துக்குடியில் வருவாய்துறை ஊழியர்கள் மறியல் போராட்டம்

கருணை நியமனம் குறைப்பு உள்ளிட்ட 9 கோரிக்கைகள்: தூத்துக்குடியில் வருவாய்துறை ஊழியர்கள் மறியல் போராட்டம்

தமிழக அரசுத்துறைகளில் 25 சதவீத பணியிடங்கள் கருணை அடிப்படையில் நியமனம் செய்யப்பட்ட நிலையில் அதை 5 சதவீதமாக குறைத்ததை கண்டித்து மற்றும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய்துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் தூத்துக்குடியில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு வருவாய்துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் தமிழகம் முழுவதும் பிப்ரவரி 19ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் நடைபெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து பிப்ரவரி 20ஆம் தேதி முதல் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் தொடர் காத்திருப்பு போராட்டமும் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இன்று தூத்துக்குடி பாளையங்கோட்டை சாலையில் வருவாய்துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் சாலை மறியல் போராட்டம் நடத்தப்பட்டது.

இந்த போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, நில அளவைத்துறை உள்ளிட்ட துறைகளில் பணிபுரியும் அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு பாதுகாப்பு வழங்கும் பணி பாதுகாப்புச் சட்டத்தை இயற்ற வேண்டும் என வலியுறுத்தினர். மேலும் காலியாக உள்ள பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும், பணியாளர்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட இலக்குகள் மூலம் மன அழுத்தம் ஏற்படுத்துவதை தவிர்க்க வேண்டும், பணித்தன்மை மற்றும் பணிப்பளுவை கருத்தில் கொண்டு அனைத்து நிலை அலுவலர்களுக்கும் மேம்படுத்தப்பட்ட ஊதியம் மற்றும் தனி ஊதியம் வழங்க வேண்டும் என்பதையும் கோரினர்.

அதேபோல் தமிழக அரசுத்துறைகளில் 25 சதவீதமாக இருந்த கருணை அடிப்படையிலான பணியிட ஒதுக்கீட்டை 5 சதவீதமாக குறைத்ததை திரும்பப் பெற வேண்டும் என்றும், அனைத்து பணியிடங்களையும் நிரந்தர அடிப்படையில் நிரப்ப வேண்டும் என்றும், ஜூலை 1ஆம் தேதியை வருவாய்துறை தினமாக அறிவித்து அரசாணை வெளியிட வேண்டும் என்றும் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

இந்த போராட்டத்திற்கு தமிழ்நாடு வருவாய்துறை அலுவலர் சங்க மாவட்ட தலைவர் சுவாமிநாதன் தலைமை வகித்தார். வருவாய்துறை சங்கங்களின் கூட்டமைப்பு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் காளிராஜ், தமிழ்நாடு வருவாய்துறை அலுவலர் சங்க மாவட்ட பொருளாளர் ராமச்சந்திரன், தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்க ஒருங்கிணைப்பாளர் பாலமுருகன், தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் முன்னேற்ற சங்க மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சந்திரசேகர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.