தூத்துக்குடியில் ₹2 கோடி நடைபாதை 2 ஆண்டில் சிதலம்.. மாநகராட்சிக்கு எதிராக எழும் கேள்விகள்..?

தூத்துக்குடியில் ₹2 கோடி நடைபாதை 2 ஆண்டில் சிதலம்.. மாநகராட்சிக்கு எதிராக எழும் கேள்விகள்..?

தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட மீளவிட்டான் செல்லும் சாலையில், சீனா வானா குளம் கரையோரத்தில் 2022–2023ஆம் ஆண்டில் சுமார் ₹2 கோடி மதிப்பீட்டில் சிமெண்ட் பேவர் பிளாக் நடைபாதை அமைக்கப்பட்டது. மொத்தம் 2,480 மீட்டர் நீளத்தில் அமைக்கப்பட்ட இந்த திட்டம் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டது.

இந்த திட்டத்தை நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் மேயர் ஜெகன் பெரியசாமி மற்றும் சமூகநலத்துறை அமைச்சர் கீதாஜீவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ஆனால், திட்டம் தொடங்கப்பட்டு இரண்டு ஆண்டுகளே ஆன நிலையில், நடைபாதையில் அமைக்கப்பட்ட பேவர் பிளாக்குகள் பல இடங்களில் உடைந்து சிதலமடைந்துள்ளன. சில இடங்களில் முழுவதுமாக உயர்ந்து பிரிந்து கிடப்பதால் பொதுமக்கள் நடந்து செல்ல முடியாத நிலை உருவாகியுள்ளது.

மேலும், கரையோர பராமரிப்பு இல்லாததால் நடைபாதை இருபுறங்களிலும் முள்செடிகள், புதர்கள் அடர்ந்து காணப்படுகின்றன. சில மரங்கள் முறிந்து விழுந்தும் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் அந்த பகுதி விஷப்பூச்சிகள் மற்றும் பாம்புகள் அதிகம் நடமாடும் இடமாக மாறியுள்ளதாக உள்ளூர் மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், ஒப்பந்தக்காரர் குறிப்பிட்ட காலத்திற்கு பராமரிப்பு செய்ய வேண்டிய விதிமுறைகள் உள்ளபோதும், மாநகராட்சி நிர்வாகம் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்ற கேள்வி எழுந்துள்ளது. ஒப்பந்தக்காரரின் பாதுகாப்பு வைப்பு (Security Deposit) தொகை பிடித்தம் செய்யப்பட்டுள்ளதா? இருந்தால் ஏன் பணிகள் சீரமைக்கப்படவில்லை? என்ற சந்தேகமும் மக்களிடையே உருவாகியுள்ளது.

அதேபோல், அதிகாரிகள் மற்றும் அலுவலர்களின் கண்காணிப்பு குறைவால் ₹2 கோடி மதிப்பீட்டிலான திட்டம் மக்களுக்கு பயனில்லாமல் போனது என்பது மிகப்பெரிய நிர்வாக தோல்வி என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்த விவகாரம் குறித்து பாஜக மாவட்ட தலைவர் சித்ராங்கதன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அவர் கூறியதாவது:

“₹2 கோடி மதிப்பீட்டில் இந்தத் திட்டம் நிறைவேற்றப்பட்டதாக நாளிதழ்கள் மூலம் அறிந்தேன். இரண்டு ஆண்டுகளிலேயே நடைபாதை சிதிலமடைந்திருப்பது மிகப்பெரிய நிர்வாக தோல்வி. மக்கள் வரிப்பணத்தில் செய்யப்பட்ட பணிகளில் தரமின்மை தெளிவாக தெரிகிறது.

உடனடியாக முழுமையான ஆய்வு நடத்தி, சேதமடைந்த நடைபாதையை மறு சீரமைத்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். இல்லையெனில் பொதுமக்கள் சார்பாக மாவட்ட அளவில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.”

மேலும், பணிகள் ஒதுக்கீடு செய்யப்பட்ட விதம், ஒப்பந்ததாரர் தேர்வு மற்றும் பணித் தரம் குறித்து வெளிப்படையான விசாரணை நடத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

இச்சம்பவம் தூத்துக்குடி மாநகராட்சியின் செயல்பாடுகள் குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.