"Happy ஆ இருங்க..." நீதிமன்றத்தில் இருந்து புறப்பட்ட மார்க்கண்டேயன் சொன்ன ஒரே வரி வைரல்..!

"Happy ஆ இருங்க..." நீதிமன்றத்தில் இருந்து புறப்பட்ட மார்க்கண்டேயன் சொன்ன ஒரே வரி வைரல்..!

தமிழக முதல்வர் ஜோசப் விஜய் குறித்து அவதூறாக பேசியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள விளாத்திகுளம் திமுக சட்டமன்ற உறுப்பினர் ஜி.வி. மார்க்கண்டேயனின் ஜாமீன் மனுவையும், அவரை 2 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்கக் கோரி காவல்துறை தாக்கல் செய்த மனுவையும் தூத்துக்குடி நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட மார்க்கண்டேயனிடம், தூத்துக்குடி மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினர் சுமார் 12 மணி நேரம் தீவிர விசாரணை நடத்தினர். பின்னர், அவரை தூத்துக்குடி 1-வது நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி சுமதி முன்னிலையில் ஆஜர்படுத்தினர். அப்போது, அவரை ஆகஸ்ட் 3-ஆம் தேதி வரை 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து, அவர் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

இதையடுத்து, மார்க்கண்டேயன் தரப்பில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. மறுபுறம், வழக்கின் விசாரணையை முன்னெடுக்க அவரை 2 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்க வேண்டும் என காவல்துறையும் தனி மனு தாக்கல் செய்தது.

இந்த இரண்டு மனுக்களும் புதன்கிழமை பிற்பகல் நீதிபதி சுமதி முன்னிலையில் விசாரணைக்கு வந்தன. அரசு தரப்பில் சிறப்பு அரசு வழக்கறிஞர் ஸ்ரீதேவி, மார்க்கண்டேயன் தரப்பில் உயர்நீதிமன்ற வழக்கறிஞர் காசிராஜன் ஆஜராகி தங்களது வாதங்களை முன்வைத்தனர்.

மார்க்கண்டேயன் தரப்பில், அவரது உடல்நிலையை கருத்தில் கொண்டு ஜாமீன் வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. அதேவேளை, காவல்துறை தரப்பில், கோவில்பட்டியில் நடைபெற்ற நன்றி தெரிவிப்பு பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட ஆர்.எஸ்.பாரதி மற்றும் கோவில்பட்டி எம்.எல்.ஏ. கருணாநிதி ஆகியோரின் தூண்டுதலின் பேரில் மார்க்கண்டேயன் முதல்வர் குறித்து அவதூறாக பேசினாரா என்பது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டியுள்ளது எனக் கூறி 2 நாட்கள் போலீஸ் காவல் கோரப்பட்டது.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி சுமதி, மார்க்கண்டேயனின் ஜாமீன் மனுவையும், காவல்துறையின் 2 நாள் போலீஸ் கஸ்டடி மனுவையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

இதனைத் தொடர்ந்து, மார்க்கண்டேயன் மீண்டும் பாளையங்கோட்டை மத்திய சிறைக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்பட்டார்.

வழக்கு விசாரணையின்போது, முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன், மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி மற்றும் திமுக நிர்வாகிகள் நீதிமன்ற வளாகத்தில் திரண்டிருந்தனர். அப்போது அவர்களைச் சந்தித்த மார்க்கண்டேயன், "Happy ஆ இருங்க... எத்தனை நாட்கள் சிறையில் இருக்கிறேனோ, அவ்வளவு சீக்கிரம் ஆட்சிக்கு வருவோம்" என்று கூறியதாக அங்கு இருந்தவர்கள் தெரிவித்தனர்.

குறிப்பு: வழக்கு தற்போது நீதிமன்ற விசாரணையில் உள்ளது. குற்றச்சாட்டுகள் தொடர்பான இறுதி முடிவை நீதிமன்றமே தீர்மானிக்கும்.