ஆதரவற்ற பெண்களின் குடிசை வீடு எரிந்து சேதம் : உடனடி உதவி வழங்க ஆட்சியர் நடவடிக்கை!!
சாத்தான்குளம் அருகே ஆதரவற்ற பெண்களின் குடிசை வீடு எரிந்த தகவல் கிடைத்தவுடன் உடனடியாக உதவிட மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், மனிதநேய நடவடிக்கை மேற்கொண்டார்.
சாத்தான்குளம் அருகே ஆதரவற்ற பெண்களின் குடிசை வீடு எரிந்த தகவல் கிடைத்தவுடன் உடனடியாக உதவிட மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், மனிதநேய நடவடிக்கை மேற்கொண்டார்.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் வட்டம், தச்சமொழி கிராமம், காந்தி நகர் தெருவை சேர்ந்தவர் அந்தோணி என்பவரின் மனைவி பண்டாரத்தி. இவர் வசித்து வந்த குடிசை வீடு 20.04.2023 அன்று திடீரென தீப்பற்றி எரிந்தது. இதுதொடர்பாக தகவலறிந்த மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ், பாதிக்கப்பட்ட நபருக்கு தேவையான நிவாரண உதவிகள் வழங்கிடுமாறு சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். அதைத்தொடர்ந்து, இன்று (21.04.2023) பாதிக்கப்பட்ட நபருக்கு அரசு வழங்கிடும் முழு நிவாரணத் தொகை ரூ.5,000/- மற்றும் உணவு பொருட்;களான அரிசி, பருப்பு, காய்கறிகள், பாத்திரங்கள், பாய் மற்றும் போர்வைகள் ஆகியவற்றை சாத்தான்குளம் வட்டாட்சியர் தங்கையா உடனடியாக வழங்கினார்.
மேலும் பாதிக்கப்பட்ட நபர்கள் எவ்வித ஆதரவும் இல்லாமல் இருந்ததால் அருகில் உள்ள காப்பகத்தில் சேர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. இதையடுத்து, மாவட்ட ஆட்சியர்களின் உத்தரவின்படி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சிவசங்கரன், சாத்தான்குளம் வட்டாட்சியர் தங்கையா மற்றும் அலுவலர்கள், நாசரேத் நல்ல மரியான் ஆதரவற்றோர் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டோர் காப்பகத்தில் இன்று பண்டாரத்தி மற்றும் இசக்கியம்மாள் ஆகியோரை காப்பகத்தில் சேர்த்தனர்.
ஆதரவற்ற பெண்களின் குடிசை வீடு எரிந்த தகவல் கிடைத்தவுடன் உடனடியாக நடவடிக்கை எடுத்து நிவாரண உதவிகள் வழங்கியதோடு மட்டுமல்லாமல் காப்பகத்தில் சேர்ப்பதற்கும் நடவடிக்கை மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு கிராம மக்கள் நன்றி தெரிவித்தனர்.