4 தொகுதிகளில் நேரடியாக மோதும் திமுக - அதிமுக - பாஜக.. எவை தெரியுமா?

4 தொகுதிகளில் நேரடியாக மோதும் திமுக - அதிமுக - பாஜக.. எவை தெரியுமா?

தமிழ்நாட்டில் அதிமுகவுடனான கூட்டணி முறிவுக்கு பிறகு புதிய கூட்டணியை தேசிய ஜனநாயக கூட்டணி உருவாக்கி உள்ளது.

இதில் பாமகவுக்கு 10 தொகுதிகளையும் தாமகவுக்கு 3 தொகுதிகளையும் அமமுகவுக்கு 2 தொகுதிகளையும் ஒதுக்கி உள்ள பாஜக, 19 தொகுதிகளில் போட்டியிட உள்ளது. மேலும், தமிழக மக்கள் முன்னேற்றக்கழகம், புதிய நீதிக்கட்சி உள்ளிட்ட 4 கூட்டணி கட்சிகள் தலா ஒரு தொகுதியில் தாமரை சின்னத்தில் போட்டியிட உள்ளன. ஓபிஎஸ் அணிக்கு ராமநாதபுரம் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.

தொகுதி பங்கீடு அனைத்தும் சுமூகமாக முடிந்த நிலையில், வேட்பாளர்களை இறுதி செய்ய தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை டெல்லி சென்றார். இந்நிலையில், 3 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக தலைமை வெளியிட்டுள்ளது. அதில், தமிழ்நாட்டில் முதற்கட்டமாக பாஜக போட்டியிடும் 9 தொகுதிகளுக்காக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

அதன்படி, தென் சென்னை தொகுதியில் பாஜக சார்பில் தமிழிசை சவுந்தரராஜன் போட்டியிட உள்ளார். அந்த தொகுதியில் கடந்த முறை திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற தமிழச்சி தங்கபாண்டியன், மீண்டும் களமிறக்கப்பட்டுள்ளார். அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் மகன் ஜெயவர்தன் களம் காண்கிறார். 3 பேரும் மக்களுக்கு நன்கு அறிந்த முகங்கள் என்பதால், நட்சத்திர தொகுதியாக தென் சென்னை பார்க்கப்படுகிறது. தன்னை வேட்பாளராக அறிவித்த பிரதமருக்கு தமிழிசை நன்றி தெரிவித்துள்ளார்.

இதே போல், மத்திய சென்னையில் பாஜக சார்பில் வினோஜ் பி செல்வம் போட்டியிடுகிறார். திமுக சார்பில் தற்போதைய எம்பி தயாநிதி மாறனே மீண்டும் களமிறக்கப்பட்டுள்ளார். அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு மத்திய சென்னை ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், விரைவில் வேட்பாளர் அறிவிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

வேலூரில் ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்டது போல் புதியநீதிக்கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தாமரை சின்னத்தில் போட்டியிட உள்ளார். அவருக்கு போட்டியாக திமுக சிட்டிங் எம்பி கதிர் ஆனந்தும் அதிமுக சார்பில் பசுபதியும் களம் காண்கின்றனர்.

கிருஷ்ணகிரி தொகுதியில் சி.நரசிம்மன் பாஜக சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். திமுக கூட்டணியில் இந்த தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் களமிறங்க உள்ளார். அதிமுக சார்பில் ஜெயபிரகாஷ் போட்டியிடுகிறார்.

இதே போல் நீலகிரி தொகுதியில் பாஜக வேட்பாளராக மத்திய இணையமைச்சர் எல்.முருகன் அறிவிக்கப்பட்டுள்ளார். திமுக சார்பில் ஆ.ராசாவும் அதிமுக சார்பில் முன்னாள் சபாநாயகர் தனபாலின் மகன் லோகேஷூம் களம் இறக்கப்பட்டுள்ளனர். இதனால் அந்த தொகுதியும் நட்சத்திர தொகுதியாக பார்க்கப்படுகிறது.

கோவையில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே அந்த தொகுதியில் திமுக சார்பில் கணபதி பி ராஜ்குமாரும் அதிமுக சார்பில் சிங்கை ராமச்சந்திரனும் முக்கிய போட்டியாளர்களாக உள்ளனர். தன்னை வேட்பாளராக அறிவித்ததற்கு பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துள்ள அண்ணாமலை, அரசியல் மாற்றத்தை தமிழக மக்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நேரம் இது என்று தெரிவித்துள்ளார். மற்றொருபுறம் விஜய்பட பாணியில் ஐஎம் வெயிட்டிங் என அண்ணாமலையை டாக் செய்து அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன் பதிவிட்டுள்ளார்.

பெரம்பலூர் தொகுதியில் பாஜக கூட்டணியைச் சேர்ந்த ஐஜேகே வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள பாரிவேந்தர், தாமரை சின்னத்தில் போட்டியிடுகிறார். அந்த தொகுதியில், அமைச்சர் கே.என்.நேருவின் மகன் அருண் நேரு முதன்முறையாக களம் இறக்கப்பட்டுள்ளார். அதிமுக சார்பில் சந்திரமோகன் போட்டியிட உள்ளார்.

முதலில் தூத்துக்குடியில் பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் போட்டியிட உள்ளதாக அறிவிக்கப்பட்ட நிலையில், உத்தேசப்பட்டியலில் இருந்த நெல்லை தொகுதியே அவருக்கு ஒதுக்கி அறிவிக்கப்பட்டது. திமுகவில் இருந்து அதிமுகவுக்கு சென்ற சிம்லா முத்துச்சோழனுக்கு அக்கட்சியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. திமுகவை பொறுத்தவரை நெல்லை தொகுதி காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. வெற்றி வாய்ப்பை மக்கள் முடிவு செய்வார்கள் என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

கன்னியாகுமரியில் முன்னாள் மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனே மீண்டும் களமிறக்கப்பட்டுள்ளார். அந்த தொகுதியில் திமுகவில் காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரியில் அதிமுக சார்பில் பசிலியான் நசரேத் களம் இறக்கப்பட்டுள்ளார்.