தமிழ்நாடு உளவுத்துறை என் செல்போனை ஒட்டு கேட்கிறது.. செந்தில் பாலாஜிக்கும் தகவல் போகிறது.. அண்ணாமலை
சென்னை: தமிழக உளவுத்துறை போலீஸ் எனது செல்போனை ஒட்டு கேட்கிறது. என் மனைவி, என் சகோதரி, என் நண்பர்கள் செல்போனை ஒட்டு கேட்கிறார்கள். சிறையில் உள்ள செந்தில் பாலாஜிக்கும் இந்த தகவல் பரிமாரப்படுகிறது என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.
தமிழகத்தில் லோக்சபா தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற இன்னும் 8 நாட்களே உள்ளது. இதனால், அனல் பறக்கும் பிரசாரத்தில் அரசியல் கட்சியினர் ஈடுபட்டுள்ளனர். வேட்பாளர்கள் அவரவர் தொகுதிகளில் கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தேர்தல் நெருங்க நெருங்க பிரசாரம் அனல் பறக்கிறது. அரசியல் தலைவர்கள் மாறி மாறி பரபரப்பு குற்றச்சட்டுக்களை முன்வைத்து வருகிறார்கள். இந்த நிலையில், இன்று கோவையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அண்ணாமலை தனது போன் ஒட்டு கேட்கப்படுவதாக கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக அண்ணாமலை கூறியதாவது:-
தமிழ்நாட்டில் திமுகவுக்கும் பாஜகவுக்கும் தான் போட்டி. அதனால்தான் பிரதமர் மோடி திமுகவை மட்டும் குற்றம் சாட்டுகிறார். எடப்பாடி ரோடு ஷோ நடத்தினால் எவ்வளவு பேர் வருகிறார்கள் என பார்ப்போம். அவர்கள் வீதியில் வந்தால் யாரும் பார்ப்பதில்லை.
கோவையில் என்னை கண்காணிக்க சிறப்பு குழு ஒன்றை உளவுத்துறை அமைத்துள்ளது. தமிழக உளவுத்துறை போலீஸ் எனது செல்போனை ஒட்டு கேட்கிறது. என் மனைவி, என் சகோதரி, என் நண்பர்கள் செல்போனை ஒட்டு கேட்கிறார்கள். அமைச்சர் டிஆர்பி ராஜாவிடம் இதுபற்றிய தகவலை சொல்கிறார். சிறையில் உள்ள செந்தில் பாலாஜிக்கும் இந்த தகவல் பரிமாரப்படுகிறது.
தெலுங்கானாவில் செல்போனை ஒட்டுக்கேட்ட உளவுத்துறையினர் தற்போது சிறையில் உள்ளனர். அங்கு உளவுத்துறை ஐஜியாக இருந்தவர் தற்போது தலைமறைவாக உள்ளார். நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் வந்தபிறகு தமிழக உளவுத்துறை அதிகாரிகள் சிறை செல்வார்கள்" என பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார்.