விளாத்திகுளம் புதூர் பயிர் உற்பத்தியாளர் கம்பெனியில் ரூ.1 கோடி மோசடி? – நடவடிக்கை கோரி விவசாயிகள் ஆட்சியரிடம் மனு

விளாத்திகுளம் புதூர் பயிர் உற்பத்தியாளர் கம்பெனியில் ரூ.1 கோடி மோசடி? – நடவடிக்கை கோரி விவசாயிகள் ஆட்சியரிடம் மனு

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் வட்டம் புதூரில் செயல்பட்டு வரும் “விளாத்திகுளம் புதூர் பயிர் உற்பத்தியாளர்கள் கம்பெனி லிமிடெட்” நிறுவனத்தில் விவசாயிகளிடம் வசூல் செய்யப்பட்ட வங்கிக் கடன் தொகையை வங்கியில் செலுத்தாமல் மோசடி செய்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த சம்பவத்தில் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாதிக்கப்பட்ட விவசாயிகள் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மாவட்ட செயலாளர் புவிராஜ், சிபிஎம் விளாத்திகுளம் தாலுகா செயலாளர் ஜோதி ஆகியோர் தலைமையில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.

இது தொடர்பாக அவர்கள் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது 

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் வட்டம் புதூரில் செயல்பட்டு வரும் விளாத்திகுளம் புதூர் பயிர் உற்பத்தியாளர்கள் கம்பெனி லிமிடெட் நிறுவனம் கடந்த 2016ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறையின் மேற்பார்வையில் செயல்பட்டு வருகிறது. இதில் கந்தசாமிபுரம், மணியக்காரண்பட்டி, மேல அருணாசலபுரம், துரைச்சாமிபுரம், தவசிலிங்கபுரம், வன்னிப்பட்டி, காடல்குடி, ரெகுராமபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான விவசாயிகள் குழுக்களாக பதிவு செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நிறுவனத்தின் மூலம் எட்டையாபுரம் கனரா வங்கியில் சுமார் 31 விவசாய குழுக்களுக்கு விவசாய கடன் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த கடனை விவசாயிகள் நேரடியாக வங்கியில் செலுத்தக் கூடாது என்றும், நிறுவனத்தின் மூலம் மட்டுமே செலுத்த வேண்டும் என்றும் கூறி மாதந்தோறும் விவசாயிகளிடமிருந்து பணம் வசூலிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

அவ்வாறு வசூலிக்கப்பட்ட பணத்தை வங்கியில் செலுத்தாமல் நிறுவனத்தின் CEO பவித்ரா, பரமசிவம், தலைவர் தர்மலிங்கம் மற்றும் நிர்வாகக்குழு உறுப்பினர்கள் சுப்புலட்சுமி, சுதாராணி ஆகியோர் சேர்ந்து கோடிக்கணக்கான ரூபாய் மோசடி செய்துள்ளதாக விவசாயிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

இதன் காரணமாக வங்கியில் கடன் செலுத்தப்படாததால் எட்டையாபுரம் கனரா வங்கி விவசாயிகளுக்கு நோட்டீஸ் மற்றும் சம்மன் அனுப்பி வழக்குகளும் பதிவு செய்துள்ளது. இதனால் விவசாயிகள் தற்போது கடும் சிக்கலில் சிக்கியுள்ளனர்.

மேலும் இந்த பிரச்சினையின் காரணமாக விவசாயிகள் நகைக்கடன், கல்விக்கடன் உள்ளிட்ட எந்தவித வங்கிக் கடன்களையும் பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். வங்கி மேற்கொள்ளும் சட்டரீதியான நடவடிக்கைகளை எதிர்கொள்ள முடியாமல் விவசாயிகள் பெரும் துயரத்தில் உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த விவகாரம் தொடர்பாக நிறுவன நிர்வாகத்திடம் பலமுறை முறையிட்டும் கடந்த மூன்று ஆண்டுகளாக பணத்தை வங்கியில் செலுத்தாமல் விவசாயிகளை ஏமாற்றி வருகிறார்கள் என பாதிக்கப்பட்டவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

இதையடுத்து விவசாயிகள் சங்கம் சார்பில் போராட்டம் அறிவிக்கப்பட்டு விளாத்திகுளம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் 13.08.2025க்குள் ரூ.20 லட்சம் வங்கியில் செலுத்துவதாக நிறுவனம் ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது. ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

மேலும் 21.08.2025 அன்று மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் அளிக்கப்பட்ட மனுவின் அடிப்படையில் வேளாண்மை விற்பனை மற்றும் வணிகத்துறை துணை இயக்குநர் விசாரணை மேற்கொண்டார். அப்போது 26.09.2025க்குள் விவசாயிகளுக்கு செலுத்த வேண்டிய பணத்தை வங்கியில் செலுத்துவதாக நிறுவன CEO பவித்ரா உறுதி அளித்ததாக கூறப்படுகிறது. ஆனால் இதுவரை அந்த பணம் வங்கியில் செலுத்தப்படவில்லை.

இதுகுறித்து 25.08.2025 அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம், முதலமைச்சர் தனிப்பிரிவு மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திலும் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் தனிப்பிரிவு புகாரின் அடிப்படையில் பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினர் விவசாயிகளை அழைத்து விசாரணை நடத்தியதாகவும், பின்னர் மாவட்ட குற்றப்பிரிவிற்கு அனுப்பப்படும் என்று தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என்று விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் எட்டையாபுரம் கனரா வங்கி நிர்வாகம் பாதிக்கப்பட்ட விவசாயிகள் மீது நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும் வங்கி நிர்வாகம் விவசாயிகளை தொலைபேசி மற்றும் நேரடியாக அழைத்து கடன் தொகையை தாங்களே செலுத்த வேண்டும் என்று அழுத்தம் கொடுத்து வருவதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

எனவே விவசாயிகளிடம் வசூல் செய்யப்பட்ட சுமார் ரூ.1 கோடிக்கும் மேற்பட்ட தொகையை வங்கியில் செலுத்தாமல் மோசடி செய்ததாக கூறப்படும் நிறுவனத்தின் CEO பவித்ரா, பரமசிவம், தலைவர் தர்மலிங்கம் மற்றும் நிர்வாகக்குழு உறுப்பினர்கள் சுப்புலட்சுமி, சுதாராணி ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

மேலும் சம்பந்தப்பட்டவர்களின் சொத்துகளை பறிமுதல் செய்து அந்த பணத்தை வங்கியில் செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட விவசாயிகளை வங்கியின் சட்ட நடவடிக்கைகளிலிருந்து பாதுகாக்க வேண்டும் என்றும் மனுவில் கேட்டுக்கொண்டுள்ளனர்.