வேடநத்தம் மாணவி கொலை: கனிமொழி எம்பியை தடுத்து நிறுத்திய கிராம மக்கள்

வேடநத்தம் மாணவி கொலை: கனிமொழி எம்பியை தடுத்து நிறுத்திய கிராம மக்கள்

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள வேடநத்தம் கிராமத்தில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்ட 12ம் வகுப்பு பள்ளி மாணவி குடும்பத்தினரை அவர்களது இல்லத்தில் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.

அவருடன் அமைச்சர் கீதாஜீவன் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் ஆகியோரும் இருந்தனர்.

மாணவி கொலை சம்பவத்தில் குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள், அரசு குடும்பத்துடன் துணை நிற்கும் என்று கனிமொழி எம்பி உறுதி அளித்தார்.

அப்போது மாணவியின் குடும்பத்தினர்,

"குற்றவாளியை விரைந்து கைது செய்து கடுமையான தண்டனை வழங்க வேண்டும். இல்லையெனில் குற்றவாளியை எங்களிடம் ஒப்படையுங்கள். மேலும் உயிரிழந்த மாணவியின் சகோதரிக்கு அரசு வேலை வழங்க வேண்டும்" என கோரிக்கை வைத்தனர்.

இதற்கு நிச்சயமாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று கனிமொழி எம்பி தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து வெளியே வந்த கனிமொழி எம்பியை கிராம மக்கள் முற்றுகையிட்டு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

"மூன்று நாட்களாகியும் குற்றவாளியை ஏன் கண்டுபிடிக்கவில்லை? இத்தனை தாமதமாக ஏன் வந்தீர்கள்?" என்று கிராம மக்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி அவரை செல்ல விடாமல் தடுத்து நிறுத்தினர்.

இதனால் அந்த பகுதியில் பரபரப்பு நிலை ஏற்பட்டது.

பின்னர் போலீசார் பாதுகாப்புடன் கனிமொழி எம்பி, அமைச்சர் கீதாஜீவன் மற்றும் எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் ஆகியோரை அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.