வாட்ஸ் அப் மூலம் லாட்டரியில் பரிசு விழுந்ததாக கூறி பெண்ணிடம் ரூ.61 லட்சம் மோசடி: கேரள வாலிபர் கைது!
தூத்துக்குடியில் லாட்டரியில் பரிசு விழுந்ததாக கூறி ரூ.61 லட்சம் பணம் மோசடி செய்த வழக்கில் கேரள வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தூத்துக்குடியில் லாட்டரியில் பரிசு விழுந்ததாக கூறி ரூ.61 லட்சம் பணம் மோசடி செய்த வழக்கில் கேரள வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் காமநாயக்கன் பட்டி மெயின்ரோடு பகுதியைச் சேர்ந்த லூர்துராஜ் மனைவி ஜான்சி (52) என்பவரது மகள் செல்போன் எண்ணுக்கு வாட்ஸ் அப்பில் கடந்த 13.01.2022 அன்று லாட்டரியில் ரூ.25,00,000 பரிசு கிடைத்துள்ளதாக குறுந்தகவல் வந்துள்ளது. அதனை நம்பி ஜான்சி அதில் உள்ள எண்ணை தொடர்பு கொண்டு ஆதார் கார்டு, மற்றும் இதர விபரங்களை தெரிவித்தும், பரிசு பணத்தை பெறுவதற்காக ரெஜிஸ்டரேசன் கட்டணம், ஜி.எஸ்.டி, வருமானவரி என பல காரணங்களை மர்ம நபர்கள் கூறியதால் அதை நம்பி பணத்தை அவர்களது வங்கி கணக்கிற்கு அனுப்பியுள்ளார்.
அதன்பிறகும் மேற்படி மர்ம நபர்கள் ஜான்சியிடம் ரூ.1.5 கோடி மதிப்புள்ள கார் பரிசாக விழுந்துள்ளதாக கூறி ரூ.50 லட்சம் என மொத்தம் ரூ.60,97,200/- பணம் மோசடி செய்து ஏமாற்றியதாக ஜான்சி NCRPல் (National Cyber crime Reporting Portal) புகார் பதிவு செய்துள்ளார். அவரது புகாரின் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன் உத்தரவின் பேரில் தலைமையிடத்து காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் மேற்பார்வையில் சைபர் குற்றப் பிரிவு காவல் ஆய்வாளர் சிவசங்கரன் தலைமையிலான போலீசார் அடங்கிய தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் ஜான்சியிடம் பணம் மோசடி செய்த கேரளா மாநிலம் எர்ணாகுளம் முண்டன்வெளி பகுதியைச் சேர்ந்த யேசுதாஸ் ஜான் மகன் சான்டலிஸிஸ் ஜான் (26) என்பவரை கேரளா மாநிலம் சென்று கைது செய்து அவரிடமிருந்த செல்போனை பறிமுதல் செய்து தூத்துக்குடி அழைத்து வரப்பட்டு தூத்துக்குடி குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண். IVல் ஆஜர்படுத்தி பாளையங்கோட்டை மத்திய சிறையிலடைத்தனர்.
சான்டலிஸிஸ் மேலும் பல நபர்களை ஏமாற்றியுள்ளது தற்போது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுகுறித்து தூத்துக்குடி சைபர் குற்றப் பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இவ்வழக்கில் தனிப்படை போலீசார் தொழில்நுட்ப ரீதியாக விசாரணை செய்து குற்றவாளியை கண்டுபிடித்து கைது செய்த தூத்துக்குடி சைபர் குற்றப்பிரிவு தனிப்படை போலீசாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன் பாராட்டினார்.