தூத்துக்குடியில் தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் சார்பில் ஜனவரி 20ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை முன்னிட்டு ஆயத்த மாநாடு..!
தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்ற ஜனவரி 20ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் தொடர்பான ஆயத்த மாநாடு தூத்துக்குடியில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க வளாகத்தில் வைத்து நடைபெற்றது.
40 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரியும் சத்துணவு ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கப்பட வேண்டும், குடும்ப பாதுகாப்புடன் கூடிய ஓய்வூதியம் வழங்கப்பட வேண்டும், பணி ஓய்வு பெறும்பொழுது பணிக்கொடையாக அமைப்பாளருக்கு ஐந்து லட்சம் சமையல் மற்றும் சமையல் உதவியாளர்களுக்கு 3 லட்சம் வழங்கப்பட வேண்டும், காலை உணவுத் திட்டத்தை சத்துணவு திட்டத்தோடு இணைத்து சத்துணவு ஊழியர்களை வைத்து நடைமுறைப்படுத்த வேண்டும், 60 ஆயிரத்திற்கும் மேலாக உள்ள காலி பணியிடங்களை விரைந்து நிரப்ப வேண்டும், தொகுப்பூதிய பணி நியமான ஆணை 95 ரத்து செய்து காலம் முறை ஊதியத்தை செயல்படுத்த வேண்டும், பணி மூப்பு அடிப்படையிலும் கல்வித் தகுதியின்படியும் பிற துறையில் உள்ள காலி பணியிடங்களில் பதவி உயர்வு வழங்கப்பட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்ற ஜனவரி 20ஆம் தேதி முதல் தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் காலவரற்ற வேலை நிறுத்த போராட்டம் நடைபெற உள்ளது.
போராட்டத்திற்கான ஆயத்த மாநாடு தமிழ்நாடு அரசு உயர் சங்க வளாகத்தில் வைத்து மாவட்ட தலைவர் பெருமாள் தலைமையில் நடைபெற்றது. மாவட்டத் துணைத் தலைவர்கள், மாவட்ட இணைச் செயலாளர்கள், மாநில செயற்குழு உறுப்பினர் பொன்னரசி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். மாவட்டத் துணைத் தலைவர் ஆனந்த செல்வம் வரவேற்று பேசினார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில துணைத்தலைவர் தே.முருகன் மாநாட்டு துவக்கி வைத்து பேசினார். மாவட்ட செயலாளர் ஜெயபாக்கியம் போராட்ட விளக்க உரையாற்றினார். தோழமை சங்க நிர்வாகிகள் வாழ்த்துரை வழங்கினர். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் மகேந்திர பிரபு, மாநில துணைத்தலைவர் தமிழரசன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். நிறைவாக தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மேனாள் மாநில துணை பொதுச் செயலாளர் என்.வெங்கடேசன் நிறைவுறையாற்றினார். மாவட்ட பொருளாளர் ஜெயசித்ரா நன்றி கூறினார். இதில் பல நூற்றுக்கணக்கான சத்துணவு ஊழியர்கள் கலந்து கொண்டனர்.