“யார் இவர்..? இப்போது தான் வருகிறாரா..?” – ஆதவ் அர்ஜுனாவை கிராம மக்கள் சுற்றிவளைத்து கடும் எதிர்ப்பு..! வேடநத்தத்தில் பரபரப்பு

“யார் இவர்..? இப்போது தான் வருகிறாரா..?” – ஆதவ் அர்ஜுனாவை கிராம மக்கள் சுற்றிவளைத்து கடும் எதிர்ப்பு..! வேடநத்தத்தில் பரபரப்பு

தூத்துக்குடி அருகே உயிரிழந்த பிளஸ்–2 மாணவியின் குடும்பத்தினரைச் சந்திக்க வந்த தமிழக வெற்றி கழகத்தின் தேர்தல் மேலாண்மைச் செயலாளர் ஆதவ் அர்ஜுனாவுக்கு கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

தூத்துக்குடி மாவட்டம் குளத்தூர் அருகே உள்ள வேடநத்தம் கிராமத்தைச் சேர்ந்த பிளஸ்–2 மாணவி கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு காட்டுப்பகுதியில் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் மாவட்டம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வரும் நிலையில் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் மாணவியின் குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் கூறி வருகின்றனர்.

இதற்கிடையில் இன்று தமிழக வெற்றி கழகத்தின் தேர்தல் மேலாண்மைச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா வேடநத்தம் கிராமத்திற்கு வந்தார். ஆனால் அவரைக் கண்டதும் ஆவேசமடைந்த கிராம மக்கள் “யார் இவர்..? எதற்காக இப்போது வருகிறார்..? நாங்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டபோது எங்கே இருந்தார்..? மாணவியின் மரணத்தில் யாரும் அரசியல் செய்ய வேண்டாம்” என முழக்கமிட்டு எதிர்ப்பு தெரிவித்தனர்.

அப்போது மாணவியின் அத்தை சுப்புலட்சுமி கண்ணீர் மல்க பேசும்போது,

“நாங்கள் ஏற்கனவே மிகுந்த துக்கத்தில் இருக்கிறோம். எதற்காக அரசியல் கட்சிகள் வந்து எங்களை தொடர்ந்து தொந்தரவு செய்கிறீர்கள்? நீங்கள் வருவது எங்களுக்குப் பிடிக்கவில்லை. எங்கள் குழந்தையின் நினைவு எங்களை விட்டுப் போகவில்லை. நீங்கள் பேட்டி கொடுத்து சென்று விடுவீர்கள், ஆனால் அவளது தாய்தான் வாழ்நாள் முழுவதும் வேதனைப்பட வேண்டும். எங்களுக்கு பணமோ பதவியோ தேவையில்லை. அரசியல்வாதிகளை நாங்கள் நம்பவில்லை” என ஆவேசமாகக் கூறினார்.

பேசிக்கொண்டிருந்தபோது அவர் வேதனையில் மயங்கி விழும் நிலைக்கு சென்றதால் அங்கிருந்தவர்கள் அவரை அமர வைத்து ஆறுதல் கூறினர்.

உறவினர்களின் எதிர்ப்பைத் தொடர்ந்து செய்தியாளர்களை வெளியே இருக்கும்படி கேட்டுக் கொண்ட ஆதவ் அர்ஜுனா, சுமார் 20 நிமிடங்கள் மாணவியின் வீட்டிற்குள் இருந்தார். பின்னர் வெளியே வந்தபோதும் கிராம மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு முழக்கமிட்டதால் அவர் தனது ஆதரவாளர்களுடன் அங்கிருந்து கிளம்பிச் சென்றார்.

செல்லும் முன் செய்தியாளர்களிடம் பேசிய ஆதவ் அர்ஜுனா, “தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் மாவட்டத்திற்கு வரும்போது மாணவியின் பெற்றோரை நேரில் சந்திக்கத் திட்டமிட்டுள்ளார்” என தெரிவித்தார்.

இந்த நிகழ்வின்போது தமிழக வெற்றி கழகத்தின் முன்னாள் மாவட்டப் பொறுப்பாளர் அஜிதா ஆக்னல் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.