திருச்செந்தூர் கோவிலில் பக்தர்கள் தங்கும் விடுதி ரூம்களை எப்படி புக் செய்வது?

திருச்செந்தூர் கோவிலில் பக்தர்கள் தங்கும் விடுதி ரூம்களை எப்படி புக் செய்வது?

திருச்செந்தூர் கோயில் பகுதியில் கட்டப்பட்டுள்ள தங்கும் விடுதியில் தங்குவதற்கு முன்பதிவு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

திருச்செந்தூர் முருகன் கோவிலில் புதிய பக்தர்கள் தங்கும் விடுதியானது, இரண்டு தளங்களுடன் 99,925 சதுர அடி பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளது. இதில்

  •  குளிர்சாதன வசதிகளுடன் 100 இருவர் தங்கும் அறைகள் (Double Bedrooms),
  • 9 கட்டில்கள் கொண்ட 16 அறைகள் மற்றும் 7 கட்டில்கள் கொண்ட 12 அறைகள் என 28 கூடுதல் படுக்கை அறைகள் (Dormitory Blocks),
  •  ஹால் மற்றும் இரண்டு படுக்கை அறைகளுடன் கூடிய 20 பக்தர்கள் தங்கும் குடில்கள் (Family Cottages),
  • சமையல் அறையுடன் கூடிய உணவகம்,
  •  ஓட்டுநர்கள் ஓய்வு அறை,
  • வாகனங்கள் நிறுத்துமிடம்,
  • மின்தூக்கி என அனைத்து வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது.

கட்டணம் எவ்வளவு தெரியுமா.?

திருச்செந்தூர் முருகன் கோயிலில் அமைக்கப்பட்டுள்ள யாத்ரி நிவாஸ் விடுதிகளில் ஒரே நேரத்தில் சுமார் 500 பக்தர்கள் தங்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும்  தரைத்தளம் மற்றும் முதல் தளத்தில் தலா 50 வீதம் அலமாரிகள், கழிப்பறையுடன் கூடிய இரண்டு படுக்கை கொண்ட 100 அறைகள் உள்ளது.

2 பேர் தங்கக்கூடிய அறைக்கு 500 ரூபாயும், ஏசி அறைக்கு 750 ரூபாயும் வசூலிக்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 10 பேர் மொத்தமாக தங்கக்கூடிய  டார்மெட்டரிக்கு 1000 ரூபாயும் கட்டணமாக வசூலிக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் ஒருவர் 100 முதல் 150 ரூபாய் கட்டணத்தில் தங்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

முன்பதிவு செய்வது எப்படி.?

திருச்செந்தூர் முருகன் கோயில் பகுதியில் கட்டப்பட்டுள்ள தங்கும் விடுதியில் தங்க விரும்பும் நபர்கள் நேரடியாக கோவில் தங்குமிட வசதி அலுவலகத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அல்லது வெளியூர் பக்தர்கள்  https://tiruchendurmurugan.hrce.tn.gov.in/ என்ற திருச்செந்தூர் கோயிலின்  அதிகாரபூர்வ இணையதளத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

ஆனால் கோயில் தங்கும் விடுதி தற்போது தான் திறக்கப்பட்டுள்ளதால், இணையதளத்தில் முன்பதிவு செயவதற்கான வசதிகள் இணைக்கப்படவில்லை, இன்னும் ஓரிரு நாட்களில் இணைக்கப்படும் என கோயில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.  இதனிடையே நவம்பர் 2 ஆம் தேதி திருச்செந்தூர் முருகன் கோவிலில் நடைபெறும் கந்தசஷ்டி திருவிழா மற்றும் நவம்பர் 7ம் தேதி நடைபெறும் சூரசம்ஹாரம் விழாவிற்கு வரும் பக்தர்கள் தங்கும் விடுதியை பயன்படுத்திக்கொள்ள வாய்ப்பாக அமைந்துள்ளது.