குலசேகரப்பட்டினம் விண்வெளித் துறைமுகம்: தென் மாவட்ட குறு, சிறு தொழில்களுக்கு பொற்காலம்! – அமைச்சர் பெ. மதன்ராஜா அதிரடி தகவல்

குலசேகரப்பட்டினம் விண்வெளித் துறைமுகம்: தென் மாவட்ட குறு, சிறு தொழில்களுக்கு பொற்காலம்! – அமைச்சர் பெ. மதன்ராஜா அதிரடி தகவல்

தூத்துக்குடி: குலசேகரப்பட்டினத்தில் அமையவுள்ள விண்வெளித் துறைமுகம் தென் மாவட்டங்களில் உள்ள குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு புதிய தொழில் வாய்ப்புகளையும், பெரிய அளவிலான ஆர்டர்களையும் உருவாக்கும் என குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் பெ. மதன்ராஜா தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடியில் தமிழ்நாடு அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறையின் கீழ் செயல்படும் FaMeTN நிறுவனம் சார்பில் 13-வது விற்பனையாளர் மேம்பாட்டு நிகழ்வு நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் முன்னிலையில் நடைபெற்ற நிகழ்ச்சியை அமைச்சர் பெ. மதன்ராஜா தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார்.

அப்போது பேசிய அமைச்சர், தமிழ்நாடு முதலமைச்சரின் வழிகாட்டுதலின்படி குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களை வலுப்படுத்தும் வகையில், 2026-27 நிதியாண்டில் ரூ.2,141 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

தொழில் முதலீடுகளை ஊக்குவிக்கும் நோக்கில் செயல்படுத்தப்படும் மூலதன மானியத் திட்டத்திற்கான நிதி ரூ.352 கோடியிலிருந்து ரூ.600 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் ரூ.248 கோடி கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.

தமிழ்நாடு அரசு 2036-ஆம் ஆண்டிற்குள் 1.5 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரம் என்ற இலக்கை நிர்ணயித்துள்ளதாகவும், இந்த இலக்கை அடைய பெருந்தொழில் நிறுவனங்களும் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களும் இணைந்து செயல்படுவது அவசியம் என்றும் அவர் தெரிவித்தார்.

சென்னை, கோவை மற்றும் மதுரை உள்ளிட்ட பகுதிகளில் ஏற்கனவே நடைபெற்ற 12 விற்பனையாளர் மேம்பாட்டு நிகழ்வுகள் மூலம் 3,670 MSME நிறுவனங்கள் பயனடைந்துள்ளதாகவும், மாநிலம் முழுவதும் 18 நிகழ்வுகளை நடத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

அதன் தொடர்ச்சியாக 13-வது விற்பனையாளர் மேம்பாட்டு நிகழ்வு தூத்துக்குடியில் நடைபெற்றது. இதில் BHEL, வ.உ.சி. துறைமுகக் கழகம், கனநீர் தொழிற்சாலை, ஜிர்கோனியம் ஆலை, NTPL மற்றும் கூடங்குளம் அணுமின் நிலையம் உள்ளிட்ட முன்னணி பொதுத்துறை நிறுவனங்கள் பங்கேற்றன.

குலசேகரப்பட்டினத்தில் அமையவுள்ள விண்வெளித் துறைமுகம் தென் மாவட்டங்களின் தொழில் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கும் என அமைச்சர் குறிப்பிட்டார். குறிப்பாக தூத்துக்குடி, கோவில்பட்டி, வள்ளியூர், கங்கைகொண்டான் மற்றும் விருதுநகர் பகுதிகளில் உள்ள தொழில்பேட்டை நிறுவனங்களுக்கு புதிய ஆர்டர்கள் மற்றும் மிகப்பெரிய தொழில் வாய்ப்புகள் கிடைக்கும் என அவர் தெரிவித்தார்.

இதனால் தென் மாவட்டங்களைச் சேர்ந்த குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு எதிர்காலத்தில் மிகப்பெரிய வளர்ச்சி வாய்ப்புகள் உருவாகும் என்றும், விண்வெளித் துறைமுகம் இந்நிறுவனங்களுக்கு “பொற்காலமாக அமையும்” என்றும் அமைச்சர் பெ. மதன்ராஜா தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 120 குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

மேலும், மாவட்டத் தொழில் மைய பொது மேலாளர் ஸ்வர்ணலதா, FaMeTN பொது மேலாளர் வெங்கடேசன், தொழில் வணிக ஆணைய அலுவலக இணை இயக்குநர் தீனதயாளன், தூத்துக்குடி மாவட்ட 'துடிசியா' தலைவர் தர்மராஜ், டான்சியா துணைத் தலைவர் கோடீஸ்வரன் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் உயர் அலுவலர்கள் பங்கேற்றனர்.