தூத்துக்குடியில் வெளிமாநில லாட்டரி விற்ற 2பேர் கைது - ரூ.43ஆயிரம் பறிமுதல்!
தூத்துக்குடியில் சட்டவிரோதமாக வெளி மாநில லாட்டரி டிக்கெட்டுகள் விற்பனையில் ஈடுபட்ட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
தூத்துக்குடியில் சட்டவிரோதமாக வெளி மாநில லாட்டரி டிக்கெட்டுகள் விற்பனையில் ஈடுபட்ட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
தூத்துக்குடியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் உத்தரவின்படி துணை கண்காணிப்பாளர் சத்தியராஜ் மேற்பார்வையில் வடபாகம் காவல் நிலைய காவல் ஆய்வாளர் பிரேம் ஆனந்த் தலைமையில் உதவி ஆய்வாளர்கள் ரத்தினவேல் பாண்டியன், குமரேசன் மற்றும் தெர்மல்நகர் காவல் நிலைய தலைமை காவலர் மாணிக்கராஜ், முதல் நிலை காவலர் மகாலிங்கம், மத்தியபாகம் காவல் நிலைய முதல் நிலை காவலர் செந்தில், முத்தையாபுரம் காவல் நிலைய முதல் நிலை காவலர் சாமுவேல், காவலர் முத்துப்பாண்டி, தென்பாகம் காவல் நிலைய காவலர் திருமணிராஜன் ஆகியோர் அடங்கிய தனிப்படை போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது தூத்துக்குடி 2வது ரயில்வே கேட் மற்றும் அம்பேத்கர்நகர் பகுதிகளில் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்த இருவரை பிடித்து விசாரணை செய்ததில், தூத்துக்குடி அழகேசபுரத்தைச் சேர்ந்த கோட்டை பாண்டியன் மகன் சுரேஷ் (43) மற்றும் போல்பேட்டை பகுதியைச் சேர்ந்த பார்வதிநாதன் மகன் மாயக்கூத்தன் (எ) பெருமாள் (64) ஆகிய அவர்கள் 2பேரும் சட்டவிரோதமாக வெளிமாநில லாட்டரி சீட்டுகள் விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் இருவரையும் கைது செய்து அவர்களிடமிருந்த 41 வெளிமாநில லாட்டரி சீட்டுகள், ஒரு செல்போன் மற்றும் ரொக்கப்பணம் ரூ.43,450 ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து வடபாகம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.