தூத்துக்குடியில் ஜன.5ல் நெடுந்தூர ஓட்டப் போட்டிகள்: ஆட்சியர் தகவல்..!

தூத்துக்குடியில் ஜன.5ல் நெடுந்தூர ஓட்டப் போட்டிகள்: ஆட்சியர் தகவல்..!

தூத்துக்குடியில் வருகிற ஜன.5ஆம் தேதி அறிஞர் அண்ணா நெடுந்தூர ஓட்டப் போட்டிகள் நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சித்லைவர் க.இளம்பகவத் தெரிவித்துள்ளார். 

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், தூத்துக்குடி மாவட்டப் பிரிவு சார்பில், அன்றாட வாழ்வில் உடற்தகுதியை பேணுவது குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடையே ஏற்படுத்துவதற்கும், உடற்தகுதி கலாச்சாரத்தை இளைஞர்களிடையே புகுத்துவதற்கும் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் மாரத்தான் போட்டிக்கு இணையான அறிஞர் அண்ணா நெடுந்தூர ஓட்டப் போட்டிகள் 05.01.2025 அன்று காலை 6.00 மணி முதல் மாவட்ட விளையாட்டரங்கத்தில் வைத்து நடைபெற உள்ளது.

ஓட்டப் போட்டிகள் 17 வயது முதல் 25 வயதிற்குட்பட்ட ஆண்களுக்கு 8 கி.மீ, பெண்களுக்கு 5 கி.மீ. 25 வயதிற்கு மேற்பட்ட ஆண்களுக்கு 10 கி.மீ, பெண்களுக்கு 5 கி.மீ. எனவும் நடைபெற உள்ளது.  

போட்டிக்கான விதிமுறைகள் : 

அண்ணா ஓட்டப் போட்டியில் கலந்து கொள்ள விரும்பவர்கள் 02.01.2025 மற்றும் 03.01.2025 ஆகிய நாட்கள் தங்களது வயதுச் சான்றிதழுடன் பெயரை மாவட்ட விளையாட்டரங்கத்தில் அலுவலக நேரத்தில் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும்.

முன்பதிவு செய்த வீரர், வீராங்கனைகள் 05.01.2025 அன்று காலை 6 மணிக்கு முன்னர் மாவட்ட விளையாட்டரங்கத்தில் நேரில் ஆஜராக வேண்டும். 

மாரத்தான் ஓட்டப் போட்டியானது மாவட்ட விளையாட்டரங்கத்தில் இருந்து ஆரம்பித்து ஜார்ஜ் ரோடு, பெல் ஹோட்டல் கார்னர், ரோச் பூங்கா, பீச் ரோடு ரயில்வே கேட் வரை சென்று மீண்டும் அதே வழியில் மாவட்ட விளையாட்டரங்கம் வந்தடையும். 

போட்டியின் போது நேரும் எதிர்பாராத விபத்துகளுக்கும், தனிப்பட்ட பொது இழப்புகளுக்கும் பங்குபெறும் வீரர், வீராங்கனைகளே பொறுப்பேற்க வேண்டும் என்று ஒப்புதல் அளிக்க வேண்டும். 

போட்டியில் கலந்து கொண்டு முதலிடம் பெறுபவர்களுக்கு ரூ.5000/-மும், இரண்டாமிடம் பெறுபவர்களுக்கு ரூ.3000/-மும், மூன்றாமிடம் பெறுபவர்களுக்கு ரூ.2000/-மும் நான்காமிடம் முதல் பத்தாமிடம் பெறுபவர்களுக்கு ரூ.1000/-மும் பரிசுத் தொகை மற்றும் சான்றிதழ் வழங்கப்பட உள்ளது. மேற்கண்ட தகவலை மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் தெரிவித்துள்ளார்.