ஓமனில் தூத்துக்குடி மாலுமி மர்ம மரணம்... 'உண்மை என்ன?' உடலை மீட்டு தரக்கோரி மனைவி கண்ணீர் மனு!

ஓமனில் தூத்துக்குடி மாலுமி மர்ம மரணம்... 'உண்மை என்ன?' உடலை மீட்டு தரக்கோரி மனைவி கண்ணீர் மனு!

ஓமன் நாட்டில் கப்பலில் பணியாற்றி வந்த தூத்துக்குடியைச் சேர்ந்த மாலுமி ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் அவரது குடும்பத்தினரிடையே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த தனது கணவரின் உடலை உடனடியாக சொந்த ஊருக்கு கொண்டு வரவும், அவரது மரணத்திற்கான உண்மையான காரணத்தை கண்டறியவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவரது மனைவி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்.

தூத்துக்குடி குரூஸ்புரம் பகுதியைச் சேர்ந்த நிஷாந்த், கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக சர்வதேச கப்பல்களில் மாலுமியாக பணியாற்றி வந்துள்ளார். கடந்த 10 மாதங்களுக்கு முன்பு ஓமன் நாட்டைச் சேர்ந்த ரொமானா மேனேஜ்மென்ட் கோ லிமிடெட் நிறுவனம் மூலம் எம்.டி. செலஸ்டியல் என்ற கப்பலில் பணியில் சேர்ந்திருந்தார்.

சில நாட்களுக்கு முன்பு வரை ஓமன் நாட்டுத் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த அந்த கப்பலில் பணியாற்றி வந்த நிஷாந்த், கடந்த 5-ம் தேதி தனது மனைவி சராபின் மற்றும் குடும்பத்தினருடன் செல்போன் மூலம் பேசியுள்ளார்.

இந்த நிலையில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு அவரது மனைவி சராபின் தனது கணவரை தொடர்பு கொள்ள முயன்றபோது செல்போன் இணைப்பு கிடைக்கவில்லை. இதையடுத்து கப்பல் நிறுவனத்தை தொடர்பு கொண்டு விசாரித்தபோது, நிஷாந்துக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு வாந்தி எடுத்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

ஆனால் அதன்பிறகு மீண்டும் நிறுவனத்தை தொடர்பு கொள்ள முயன்றபோது உரிய தகவல் கிடைக்கவில்லை என குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இதற்கிடையில், கப்பல் மாலுமிகள் பயன்படுத்தும் சமூக வலைதளக் குழு மூலம் நிஷாந்த் உயிரிழந்துவிட்டதாக தகவல் கிடைத்துள்ளது.

இந்த தகவலை அறிந்த குடும்பத்தினர் கடும் அதிர்ச்சியடைந்தனர். குறிப்பாக, தனது கணவரின் உடல்நிலை மற்றும் மரணம் குறித்து நிறுவன தரப்பில் தெளிவான தகவல் தெரிவிக்கப்படவில்லை என்றும், மரணத்திற்கான காரணம் என்ன என்பது குறித்து இதுவரை எந்த விளக்கமும் வழங்கப்படவில்லை என்றும் மனைவி சராபின் வேதனை தெரிவித்துள்ளார்.

இதையடுத்து சராபின் தனது உறவினர்களுடன் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து மனு அளித்தார். அந்த மனுவில், தனது கணவரின் உடலை உடனடியாக மீட்டு சொந்த ஊருக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அவரது மரணத்திற்கான காரணம் குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும், "எங்களுக்கு 10 மாத ஆண் குழந்தையும், 4 வயது பெண் குழந்தையும் உள்ளனர். குடும்பத்தின் எதிர்கால வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு கப்பல் நிறுவனத்திடம் இருந்து உரிய இழப்பீடு பெற்றுத் தர வேண்டும். இதற்காக தமிழக அரசு, மத்திய வெளிவிவகாரத்துறை, மாவட்ட நிர்வாகம் மற்றும் சம்பந்தப்பட்ட துறைகள் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து கப்பல் மாலுமிகள் சங்கத்தினரும் கவலை தெரிவித்துள்ளனர். நிஷாந்தின் மரணம் தொடர்பாக முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும், அவரது குடும்பத்தினருக்கு உரிய நிவாரணம் மற்றும் இழப்பீடு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

ஓமன் நாட்டில் பணியாற்றியபோது மர்மமான முறையில் உயிரிழந்த தூத்துக்குடி மாலுமியின் மரணம் தொடர்பாக உண்மை என்ன என்பது குறித்து குடும்பத்தினரும், உறவினர்களும் பதிலுக்காக காத்திருக்கின்றனர்.