இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.50 லட்சம் பீடி இலைகள், படகுடன் பறிமுதல் - 2பேர் கைது!

இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.50 லட்சம் பீடி இலைகள், படகுடன் பறிமுதல் - 2பேர் கைது!

தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.50 லட்சம் மதிப்புள்ள பீடி இலைகளை க்யூ பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர். 2பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

தூத்துக்குடி தாளமுத்து நகர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட விவேகானந்தர் காலனி கடற்கரையில் க்யூ பிரிவு ஆய்வாளர் விஜய அனிதா தலைமையில் உதவி ஆய்வாளர் ராமசந்திரன், சிறப்பு உதவி ஆய்வாளர் ராமர், தலைமை காவலர்கள் இருதயராஜகுமார், இசக்கிமுத்து, காவலர்கள் பழனி, பாலமுருகன், பேச்சி ராஜா ஆகியோர் நேற்று இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். 

அப்போது இலங்கைக்கு கடத்துவதற்காக பதிவு எண் இல்லாத பைபர் படகில் 30 கிலோ வீதம் 34 மூட்டைகளில் இருந்த பீடி இலைகள் கைப்பற்றப்பட்டுள்ளது. இதன் மதிப்பு சுமார் 50 இலட்சம் ஆகும். இது தொடர்பாக திரேஸ்புரம் சிலுவையார் கோவில் தெரு ஜலாலுதீன் மகன் சம்சுதீன் (39), தாளமுத்து நகர் ஜாகிர் உசேன் நகர் முருகன் மகன் சுடலைமணி (23) ஆகிய 2பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். 

மேலும் பீடி இலைகளை கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட லோடு வாகனத்துடன் சிலர் தப்பி ஓடி விட்டனர். அவர்களை போலீசார் தேடி வருகின்றனர். கைப்பற்றப்பட்ட பீடி இலைகள் பைபர் படகு மற்றும் கைதான 2பேர் தூத்துக்குடி சுங்கத்துறை வசம் ஒப்படைக்கப்பட்டனர்.