தைவான் நாட்டில் வேலை என்று ரூ.4 லட்சம் வாங்கி ஏமாற்றினார்களா? சுற்றுலா விசாவில் அனுப்பப்பட்ட தமிழர் கைது... தூத்துக்குடி ஆட்சியரிடம் பரபரப்பு புகார்!

தைவான் நாட்டில் வேலை என்று ரூ.4 லட்சம் வாங்கி ஏமாற்றினார்களா? சுற்றுலா விசாவில் அனுப்பப்பட்ட தமிழர் கைது... தூத்துக்குடி ஆட்சியரிடம் பரபரப்பு புகார்!

தூத்துக்குடி: தைவான் நாட்டில் மாதம் ரூ.70 ஆயிரம் முதல் ரூ.80 ஆயிரம் வரை சம்பளம் வழங்கப்படும் எனக் கூறி ரூ.4 லட்சம் பெற்றதாகக் கூறப்படும் தனியார் கன்சல்டன்சி நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் பரபரப்பு புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே தேன்பொத்தை பகுதியைச் சேர்ந்த வி. முத்துராமலிங்கம் அளித்துள்ள மனுவில், அவரது மகன் மணிகண்டன் (22), ஐ.டி.ஐ. படிப்பை முடித்த நிலையில், கோவில்பட்டி–பசுவந்தனை சாலையில் செயல்பட்டு வரும் Subi Live Tech நிறுவனம், VMS Consultancy மூலம் தைவானில் தக்காளி பேக்கிங் வேலை, மாதம் ரூ.70,000 முதல் ரூ.80,000 வரை சம்பளம், இலவச தங்குமிடம் மற்றும் உணவு வசதி வழங்கப்படும் என விளம்பரம் செய்ததாக தெரிவித்துள்ளார்.

இதனை நம்பிய அவரது மகன் வேலைக்காக அணுகியபோது, அங்கு பணியாற்றியதாகக் கூறப்படும் பெண் ஒருவர் வேலை வாங்கித் தர ரூ.4 லட்சம் செலுத்த வேண்டும் என தெரிவித்ததாகவும், அதன்படி குடும்ப நகைகளை அடமானம் வைத்து பெற்ற ரூ.4 லட்சத்தை 08.12.2025 அன்று நிறுவனத்தின் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கணக்கிற்கு அனுப்பியதாகவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையடுத்து 14.02.2026 அன்று மணிகண்டன் தைவானுக்கு அனுப்பப்பட்டதாகவும், ஆனால் விளம்பரத்தில் கூறியபடி ரூ.70 ஆயிரம் முதல் ரூ.80 ஆயிரம் வரை சம்பளமும் வழங்கப்படவில்லை என்றும், தங்குமிடம் மற்றும் உணவு வசதிகளும் ஏற்பாடு செய்யப்படவில்லை என்றும் பெற்றோர் குற்றம்சாட்டியுள்ளனர்.

மேலும், வேலைவாய்ப்பு விசாவிற்கு பதிலாக சுற்றுலா விசாவில் அனுப்பப்பட்டதாகவும், அதன் காரணமாக தற்போது தைவானில் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளதாகவும், அவர் எந்த காவல் நிலையத்தில் அல்லது சிறையில் உள்ளார் என்பது கூட குடும்பத்தினருக்கு தெரியாத நிலை இருப்பதாகவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, தங்களது மகனை உடனடியாக இந்தியாவிற்கு பாதுகாப்பாக மீட்டுக் கொண்டு வர மத்திய மற்றும் மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், ரூ.4 லட்சத்தை மீட்டுத் தருவதோடு, சம்பந்தப்பட்ட நிறுவனம் மீது முழுமையான விசாரணை நடத்தி, இதேபோல் வேறு இளைஞர்களும் பாதிக்கப்பட்டுள்ளனரா என்பதையும் கண்டறிந்து, சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த விவகாரம் தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட காவல் துறை அலுவலகத்திலும் தனியாக புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

குறிப்பு: இந்த குற்றச்சாட்டுகள் அனைத்தும் புகார் மனுவில் கூறப்பட்டுள்ளவை. இது தொடர்பாக Subi Live Tech நிறுவனம் அல்லது VMS Consultancy தரப்பிலிருந்து இதுவரை எந்த அதிகாரப்பூர்வ விளக்கமும் வெளியாகவில்லை.