தூத்துக்குடியில் 2013 விநாயகர் சதுர்த்தி கொலை வழக்கு: 4 பேருக்கு ஆயுள் தண்டனை – 2 பேர் சரித்திரப் பதிவேடு குற்றவாளிகள்

தூத்துக்குடியில் 2013 விநாயகர் சதுர்த்தி கொலை வழக்கு: 4 பேருக்கு ஆயுள் தண்டனை – 2 பேர் சரித்திரப் பதிவேடு குற்றவாளிகள்

தூத்துக்குடி: தூத்துக்குடியில் கடந்த 2013-ஆம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி தினத்தன்று, முன்விரோதம் காரணமாக வாலிபர் காளிமுத்து கொலை செய்யப்பட்ட வழக்கில், 2 சரித்திரப் பதிவேடு குற்றவாளிகள் உட்பட 4 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து தூத்துக்குடி முதலாவது கூடுதல் மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

தூத்துக்குடி சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சுந்தரவேல்புரம் பகுதியைச் சேர்ந்த முனியசாமியின் மகன் காளிமுத்து என்பவர், கடந்த 2013-ஆம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி தினத்தன்று முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டார்.

இந்த கொலை சம்பவம் தொடர்பாக சிப்காட் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையின் அடிப்படையில், தூத்துக்குடி டூவிபுரம் பகுதியைச் சேர்ந்த ஜெயக்குமார் மகன் ராஜாமணி (35/26), நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த சந்திரமோகன் மகன் சரத்பாபுகுமார் என்ற சரத் (36/26), தூத்துக்குடி மாப்பிள்ளையூரணி பகுதியைச் சேர்ந்த லட்சுமணன் மகன் சரவணன் (34/26) மற்றும் தங்கப்பாண்டி மகன் சந்தனகுமார் (34/26) ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதையடுத்து, இவ்வழக்கு தூத்துக்குடி முதலாவது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் (ADJ-I) விசாரணைக்கு வந்தது. பல ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த வழக்கின் விசாரணை நிறைவடைந்த நிலையில், 11.09.2026 அன்று நீதிபதி தாண்டவம் தீர்ப்பு வழங்கினார்.

தீர்ப்பில், ராஜாமணி, சரத்பாபுகுமார் என்ற சரத், சரவணன் மற்றும் சந்தனகுமார் ஆகிய 4 பேரும் குற்றவாளிகள் என நீதிமன்றம் உறுதி செய்தது. இதனைத் தொடர்ந்து, நால்வருக்கும் ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

2013 விநாயகர் சதுர்த்தி தினத்தில் நடைபெற்ற கொலை சம்பவத்திற்கு சுமார் 13 ஆண்டுகளுக்குப் பிறகு நீதிமன்ற தீர்ப்பு வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தூத்துக்குடியில் நீண்டகாலமாக விசாரணையில் இருந்த கொலை வழக்கில் 4 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.