கார் விபத்தில் தனியார் தொலைக்காட்சி கேமரா மேன் உயிரிழப்பு: 3பேர் படுகாயம்!!
நாங்குநேரி அருகே கார் விபத்தில் புதிய தலைமுறை தொலைக்காட்சி கேமராமேன் உயிரிழந்தார். மேலும் 3பேர் படுகாயம் அடைந்தனர்.
திருவனந்தபுரத்தில் செய்தியாளர் சந்திப்பு முடிந்ததும் அக்குழுவினர் அங்கிருந்து புறப்பட்டு காரில் நெல்லை நோக்கி திரும்பி வந்தனர். நள்ளிரவு ஒரு மணி அளவில் நாங்குநேரி நான்குவழி சாலையில் உள்ள தனியார் மில் அருகே வந்த போது, கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலை நடுவில் உள்ள தடுப்புச் சுவர் மீது மோதி கவிழ்ந்தது. இந்த விபத்தில் காரை ஓட்டி வந்த புதிய தலைமுறை தொலைக்காட்சி கேமராமேன் சங்கர் (32) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
மேலும் புதிய தலைமுறை செய்தியாளர் நாகராஜன்(45), நியூஸ் 7 தமிழ் கேமரா மேன் வள்ளிநாயகம்(38) மற்றொரு கேமரா மேன் நாராயணன் (35) ஆகியோர் படுகாயம் அடைந்தனர். அக்கம், பக்கத்தினர் மூவரையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். தகவல் அறிந்து அங்கு சென்ற நாங்குநேரி போலீசார் விபத்தில் சிக்கி உயிரிழந்த சங்கரின் உடலை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதனைத் தொடர்ந்து நெல்லை செய்தியாளர்கள் அனைவரும் நெல்லை அரசு மருத்துவமனைக்கு திரண்டு வந்து விபத்தில் சிக்கிய சக செய்தியாளர்களுக்கு உதவி செய்தனர். செய்தி சேகரித்து பின் வீடு திரும்பும் வழியில் செய்தியாளர்கள் விபத்தில் சிக்கி பலியான சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. விபத்தில் இறந்த சங்கருக்கு மனைவி மற்றும் ஒரு மகன் உள்ளனர். இந்த கார் விபத்து நெல்லை மாவட்ட செய்தியாளர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது .