திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு சர்ச்சை..! தேமுதிக இடங்கள் குறையுமா? இடதுசாரிகள் கடும் எதிர்ப்பு

திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு சர்ச்சை..! தேமுதிக இடங்கள் குறையுமா? இடதுசாரிகள் கடும் எதிர்ப்பு

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், திமுக தலைமையிலான கூட்டணியில் தொகுதி பங்கீடு தொடர்பாக கடும் இழுபறி நிலவி வருகிறது. குறிப்பாக இடதுசாரி கட்சிகள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் இன்னும் இறுதி முடிவு எட்டப்படாததால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அறிவாலய வட்டார தகவலின்படி, ஐயூஎம்எல், மமக, காங்கிரஸ் மற்றும் மதிமுக ஆகிய கட்சிகளுடன் திமுக ஏற்கனவே தொகுதி ஒப்பந்தத்தை முடித்துள்ளது. ஆனால் இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் விசிக ஆகிய கட்சிகளுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை இன்னும் முடிவுக்கு வரவில்லை.

கடந்த தேர்தலில் மதிமுக, சிபிஐ, சிபிஎம் மற்றும் விசிக ஆகிய கட்சிகளுக்கு தலா 6 தொகுதிகள் வழங்கப்பட்டிருந்தன. ஆனால் இந்த முறை கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதை காரணமாகக் கூறி திமுக இடங்களை குறைக்க முயற்சி செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதன்படி மதிமுகவுக்கு 4 இடங்கள் வழங்கப்பட்டுள்ள நிலையில், மற்ற கூட்டணிக் கட்சிகளுக்கும் அதே அளவிலேயே வழங்க முடியும் என திமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இதற்கு இடதுசாரி கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

“கொள்கை ரீதியாக இணைந்துள்ள எங்களுக்கு குறைவான இடங்கள் வழங்கி, தேமுதிகவுக்கு 10 தொகுதிகளும் மாநிலங்களவை இடமும் வழங்குவது எப்படி நியாயம்?” என அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இதற்கிடையில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்துடன் திமுக தரப்பு தொடர்பு கொண்டு, தொகுதிகளின் எண்ணிக்கையை சற்று குறைக்குமாறு கேட்டுக் கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

“தொடக்கத்தில் காங்கிரஸ் கூட்டணியில் இருந்து விலகும் சூழல் இருந்ததால் 10 இடங்கள் வழங்குவதாக கூறினோம். தற்போது காங்கிரஸ் கூட்டணியில் தொடர்வதோடு கூடுதல் இடங்களும் கேட்கிறது. எனவே தேமுதிக தொகுதிகளை சற்று குறைத்துக் கொள்ள வேண்டும்” என திமுக தரப்பில் கூறப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கு பிரேமலதா தரப்பு “ஆலோசித்து பதில் தருகிறோம்” என தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் தேமுதிக இடங்கள் குறைந்தால் அதனால் இடதுசாரி கட்சிகளுக்கு கூடுதல் வாய்ப்பு கிடைக்கும் என அவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையில் விசிக 10 இடங்கள் எதிர்பார்த்த நிலையில் தற்போது 8 இடங்களுக்கு சமரசமாக இறங்கி வந்ததாகவும், ஆனால் திமுக 5 இடங்கள்தான் வழங்க முடியும் என தெரிவித்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் திருமாவளவன் தரப்பில் அதிருப்தி நிலவுகிறது.

தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை நாளை மீண்டும் நடைபெறவுள்ள நிலையில், திமுக கூட்டணியில் அடுத்த கட்ட அரசியல் திருப்பம் ஏற்படுமா என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது.