ரூ.2 லட்சம் கடன்... வங்கியில் திரும்பிய காசோலை! மகிளா காங்கிரஸ் நிர்வாகிக்கு ஓராண்டு சிறை – சாத்தான்குளம் நீதிமன்றம் அதிரடி!

ரூ.2 லட்சம் கடன்... வங்கியில் திரும்பிய காசோலை! மகிளா காங்கிரஸ் நிர்வாகிக்கு ஓராண்டு சிறை – சாத்தான்குளம் நீதிமன்றம் அதிரடி!

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் ரூ.2 லட்சம் கடன் பெற்றுவிட்டு, வங்கிக் கணக்கில் போதிய பணம் இல்லாததால் காசோலை திரும்பிய வழக்கில், வட்டார மகிளா காங்கிரஸ் நிர்வாகிக்கு ஓராண்டு சிறைத் தண்டனை விதித்து சாத்தான்குளம் குற்றவியல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சாத்தான்குளம் இடைக்குடி தெருவைச் சேர்ந்த சங்கரநாராயணன் மகன் சண்முகசுந்தரம். இவர் நகர காங்கிரஸ் கமிட்டி நிர்வாகியாகப் பொறுப்பு வகித்து வருகிறார். இவரிடம் சாத்தான்குளம் அருகே உள்ள கொழுந்தட்டு வடக்குத் தெருவைச் சேர்ந்த இருதயராஜ் என்பவரது மனைவியும், வட்டார மகிளா காங்கிரஸ் நிர்வாகியுமான வசுமதி, கடந்த 25.09.2021 அன்று குடும்ப அவசரத் தேவைக்காக ரூ.2 லட்சம் கடனாகப் பெற்றுள்ளார்.

இந்தத் தொகையை ஒரு மாதத்திற்குள் திருப்பிச் செலுத்துவதாகக் கூறிய வசுமதி, அதற்காக 02.11.2021 தேதியிட்ட வங்கிக் காசோலையை சண்முகசுந்தரத்திடம் வழங்கியுள்ளார். ஆனால், அந்தக் காசோலையை சண்முகசுந்தரம் வங்கியில் செலுத்தியபோது, வசுமதியின் வங்கிக் கணக்கில் போதிய பணம் இல்லாததால் காசோலை திரும்பியுள்ளது.

இதையடுத்து, வழக்கறிஞர் மூலம் சட்டப்பூர்வ நோட்டீஸ் அனுப்பியும் கடன் தொகையைத் திருப்பிச் செலுத்தாததால், சண்முகசுந்தரம் சாத்தான்குளம் குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த குற்றவியல் நீதிபதி தேவி ரக்ஷா, வசுமதி மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவருக்கு ஓராண்டு சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

மேலும், கடன் தொகையான ரூ.2 லட்சத்தை இரண்டு மாதங்களுக்குள் சண்முகசுந்தரத்திடம் திருப்பி வழங்க வேண்டும் என்றும், அவ்வாறு வழங்கத் தவறினால் கூடுதலாக மூன்று மாதங்கள் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.

காசோலை திரும்பிய வழக்கில் மகிளா காங்கிரஸ் நிர்வாகிக்கு நீதிமன்றம் சிறைத் தண்டனை விதித்துள்ள சம்பவம் சாத்தான்குளம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.