சேவைக்குறைபாடு: தனியார் நிதி நிறுவனம் ரூ.65,708 வழங்க உத்தரவு!
கடன் தொகையை செலுத்திய பின்னரும் இரு சக்கர வாகனத்தை எடுத்துச் சென்ற தனியார் நிதி நிறுவனம் பாதிக்கப்பட்ட நுகர்வோருக்கு ரூ.65,708 வழங்க வேண்டுமென தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவு பிறப்பித்தது.
தூத்துக்குடி மாவட்டம் பரமன்குறிச்சியைச் சார்ந்த சேர்மராஜ் என்பவர் இரு சக்கர வாகனம் வாங்க திருநெல்வேலியிலுள்ள தனியார் நிதி நிறுவனத்திடம் கடன் வாங்கியுள்ளார். அதற்கான முழுத் தொகையையும் தவணை முறையில் செலுத்தி விட்டார். ஆனால் திடீரென ஒரு நாள் இரவில் புகார்தாரர் வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்த இரு சக்கர வாகனத்தை தனியார் நிதி நிறுவனம் எடுத்துச் சென்று விட்டனர்.
மேலும் இரு சக்கர வாகனத்தை பதிவு செய்த ஒரிஜினல் ஆர்.சி.புத்தகத்தையும் தர மறுத்து விட்டது. அதோடு வாகனத்தை திருப்பித் தர வேண்டுமெனில் கூடுதலாக பணம் செலுத்த வேண்டும் எனக் கூறியதால் வேறு வழியின்றி புகார்தாரரும் பணத்தை செலுத்தி விட்டார்.
இதனால் வழக்கறிஞர் மூலம் நுகர்வோர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். ஆனால் இதன் பின்னரும் உரிய பதில் கிடைக்காததால் மன உளைச்சலுக்கு ஆளான நுகர்வோர் தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார்.
வழக்கை விசாரித்த தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் திருநீல பிரசாத், உறுப்பினர்கள் ஆ.சங்கர், நமச்சிவாயம் ஆகியோர் நிதி நிறுவனத்தின் சேவை குறைபாட்டினை சுட்டிக் காட்டி பாதிக்கப்பட்ட நுகர்வோருக்கு கூடுதலாக பெற்ற தொகையான ரூபாய் 30,708, சேவை குறைபாடு மற்றும் மன உளைச்சலுக்கு நஷ்டஈடு தொகை ரூ.25,000, வழக்கு செலவுத் தொகை ரூ.10,000 ஆக மொத்தம் ரூ.65,708 ஐ இரு மாத காலத்திற்குள் வழங்க வேண்டும் இல்லையென்றால் வழக்குத் தொடர்ந்த நாள் முதல் 9% வட்டியுடன் வழங்க வேண்டும் என உததிரவிட்டனர்.