தூத்துக்குடி அருகே முத்தையாபுரத்தில் திறந்த நிலையிலிருந்த கழிவுநீர்த் தொட்டியில் குழந்தை விழுந்த விவகாரத்தில், பிரபல‌ ஹோட்டல் உணவக உரிமம் ரத்து!!

தூத்துக்குடி அருகே முத்தையாபுரத்தில் திறந்த நிலையிலிருந்த கழிவுநீர்த் தொட்டியில் குழந்தை விழுந்த விவகாரத்தில், பிரபல‌ ஹோட்டல் உணவக உரிமம் ரத்து!!

உணவக வளாகத்தில் திறந்த நிலையிலிருந்த கழிவுநீர்த் தொட்டியில் குழந்தை விழுந்த விவகாரத்தில், சம்பந்தப்பட்ட உணவு வணிகரிடத்தில் மேற்கொண்ட விசாரணையின் அடிப்படையில், அவ்வுணவகத்தின் உணவு பாதுகாப்பு உரிமத்தினை இடைநீக்கம் செய்து உத்திரவிடப்பட்டுள்ளது - மாவட்ட நியமன அலுவலர் அறிவிப்பு.

தூத்துக்குடி மாநகராட்சியின் திருச்செந்தூர் மெயின் ரோட்டில் உள்ள ஒரு உணவக வளாகத்தில் திறந்த நிலையில் இருந்த கழிவுநீர்த் தொட்டியில் குழந்தை ஒன்று விழுந்து விபத்து ஏற்பட்டதாகவும், அதனால் மாநகராட்சி சுகாதார அலுவலர்கள் அந்த உணவகத்திற்கு மூடி முத்திரையிட்டதாகவும் ஊடகங்களின் கட்செவி தளங்கள் மூலம் பெறப்பட்ட தகவலின் அடிப்படையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. முதல் கட்டமாக, மாநகராட்சி சுகாதார அலுவலர் மூலம் நடந்த சம்பவம் உறுதி செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட உணவகத்தின் உரிமையாளரிடம் விசாரணை மேற்கொண்டதில், கழிவுநீர்த் தொட்டியினை மூடி வைத்திருந்த ஐந்து சிமெண்ட் மூடிகளில், ஒரு மூடியானது சில நாட்களுக்கு முன்னர் கால்நடைகளால் சேதமடைந்ததாகவும், அதனால் சிறு இடைவெளி ஏற்பட்டதாகவும், அதில் சிறு குழந்தை விழுந்து விபத்து ஏற்பட்டது உண்மைதான் என்றும் அறியப்பட்டது.

இதன் மூலம், கழிவுநீர்த் தொட்டியைத் திறந்து வைத்திருந்து, விபத்து ஏற்பட வாய்ப்பை உருவாக்கியதுடன், கழிவுநீர்த் தொட்டியைத் திறந்து வைத்து, உணவு பாதுகாப்பு சுகாதார நடைமுறைகளைக் கடைபிடிக்காமல், அவ்வுணவகத்தில் தயாரிக்கப்படும் உணவின் பாதுகாப்பில் சமரசம் செய்து, அதன் மூலம் சம்பந்தப்பட்ட உணவு வணிகர் நுகர்வோர் பாதுகாப்பில் சமரசம் செய்ததும் உறுதி செய்யப்பட்டது.

எனவே, உணவு வணிக உரிமையாளர் பொதுமக்களின் பொதுசுகாதார நலனிற்கு ஊறுவிளைவித்தது உறுதியானதால், உணவுப் பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டத்தின் கீழ் அவ்வுணவகத்திற்கு வழங்கப்பட்ட உணவு பாதுகாப்பு உரிமத்தினை தற்காலிக இடைநீக்கம் செய்து உத்திரவிடப்பட்டுள்ளது. 

மேலும், இவ்விவகாரம் குறித்து சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மற்றும் நபர்களிடத்தில் சாட்சியங்கள் பெற்று, சம்பந்தப்பட்ட உணவக உரிமையாளருக்கு எதிராக வழக்கு பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்படுகின்றது.

மேலும், மாநகராட்சியால் வளாகம் திறக்கப்பட்ட பின்னர், ஆய்வு செய்து, அவ்வாய்வின் அடிப்படையில் முன்னேற்ற அறிவிப்பு வழங்கி, சுகாதாரக் குறைபாடுகளை நிவர்த்தி செய்த பின்னரே, அவ்வுணவகத்தினை மீண்டும் இயக்க அனுமதி வழங்குவது குறித்து இறுதி உத்தரவு பிறப்பிக்கப்படும் என்றும் அறிவிக்கப்படுகின்றது.

அனைத்து உணவக உரிமையாளர்களும் தங்களது வளாகம் சுகாதாரமாக உள்ளதையும், பாதுகாப்பாக உள்ளதையும், தயாரிக்கப்படும் உணவு சுகாதாரமாகவும் பாதுகாப்பானதாகவும் உள்ளதையும் உறுதி செய்ய வேண்டும். தவறும் பட்சத்தில், உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டத்தின் கீழ் உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அதில் எவ்வித சமரசமும் இல்லை என்றும் அறிவிக்கப்படுகிறது.

மேலும், நுகர்வோர்களுக்கு உணவு பாதுகாப்பு தொடர்பான புகார்கள் ஏதும் இருப்பின், 9444042322 என்ற மாநில உணவு பாதுகாப்புத் துறை ஆணையர் அலுவலகக் கட்செவி எண்ணிற்கோ அல்லது உணவு பாதுகாப்புத் துறையின் TN Food Safety என்ற புகார் செயலி மூலமாகவோ அல்லது https://foodsafety.tn.gov.in என்ற இணையதளம் மூலமாகவோ புகார் அளிக்கலாம். புகார் அளிப்பவரது ரகசியங்கள் காக்கப்படும். என  உணவு பாதுகாப்பு துறை தூத்துக்குடி மாவட்ட நியமன அலுவலர் 

டாக்டர்.ச.மாரியப்பன், தெரிவித்துள்ளார்.