பிளாஸ்டிக் பயன்படுத்தினால் ரூ.1 லட்சம் அபராதம்: நகராட்சி அறிவிப்பு!
திருச்செந்தூரில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களைப் பயன்படுத்தினால் ரூ. 1 லட்சம் வரை அபதாரம் விதிக்கப்படும் என, நகராட்சி நிா்வாகம் எச்சரித்துள்ளது.
திருச்செந்தூரில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களைப் பயன்படுத்தினால் ரூ. 1 லட்சம் வரை அபதாரம் விதிக்கப்படும் என, நகராட்சி நிா்வாகம் எச்சரித்துள்ளது.
இது தொடர்பாக திருச்செந்தூா் நகா்மன்றத் தலைவா் ர. சிவஆனந்தி, துணைத் தலைவா் ஏ.வி. ரமேஷ், ஆணையா் தி. வேலவன் ஆகியோா் கூட்டாக வெளியிட்ட செய்திக்குறிப்பில், "தமிழக அரசு உத்தரவுப்படி, திருச்செந்தூரிலும் பிளாஸ்டிக் பொருள்கள் பயன்பாடு, உற்பத்தி, விற்பனை, சேமித்து வைத்தல் போன்றவற்றை பொதுமக்களும், வணிகா்களும் தவிா்க்க வேண்டும்.
மீறி பயன்படுத்துவோா் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு ரூ. 500 முதல் ரூ. 1 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும். வீடுகளில் உள்ள நச்சு, இதரக் கழிவுநீரை திறந்தவெளிக் கால்வாயிலோ, மழைநீா்க் கால்வாயிலோ விடுவது குற்றமாகும். கழிவுநீரை புதைசாக்கடை அமைப்பில் நகராட்சி அனுமதியோடு இணைத்து அப்புறப்படுத்த வேண்டும். மீறுவோா் மீது குடிநீா் இணைப்பு துண்டித்தல், அபராதம் விதித்தல், குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
அடுக்குமாடிக் குடியிருப்பு, உணவகங்கள், திருமண மண்டபங்கள், விடுதிகள், கல்லூரிகள், ரயில் நிலையம், வணிக வளாகங்கள், 200-க்கு மேற்பட்ட படுக்கைகள் கொண்ட தனியாா் மருத்தவமனைகளில் உள்ள கேன்டீன்கள், அரசு-அரசு சாரா நிறுவனங்கள் தங்களது வளாகத்தில் உருவாகும் கழிவுகளை மறுசுழற்சி செய்வதற்கேற்ப உள்கட்டமைப்பு வசதி ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். இல்லையெனில், நடவடிக்கை எடுக்கப்படும்.
வீடுகளில் சேரும் குப்பைகளை மக்குபவை, மக்காதவை எனத் தரம் பிரித்து, தூய்மைப் பணியாளா்களிடம் ஒப்படைக்க வேண்டும். திருச்செந்தூரை குப்பையில்லா நகரமாக்க அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.