மகப்பேறு மருத்துவர்கள் பற்றாக்குறை உருவாகும் நிலை : தமிழக அரசு மீது மருத்துவர்கள் குற்றச்சாட்டு!
தமிழக அரசின் அச்சுறுத்தல் காரணமாக வருங்காலங்களில் மகப்பேறு மருத்துவர்கள் பற்றாக்குறை உருவாகும் நிலை ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் சங்கம் குற்றம்சாட்டியுள்ளது.
தூத்துக்குடியில் இந்திய மருத்துவ சங்கம் மற்றும் மகப்பேறு மருத்துவம் மகளிர் நலன் சங்கம் சார்பில் தூத்துக்குடி கிளை தலைவர் மகப்பேறு மருத்துவர் பூங்கோதை தலைமையிலான மருத்துவர்கள் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது அவர்கள் கூறுகையில் "சமீபத்தில் தர்மபுரியில் தனியார் மருத்துவமனையில் பிரசவம் பார்த்தபோது ஒரு பெண் உயிரிழந்தார். இந்த சம்பவத்திற்கு முழு காரணம் அந்த தனியார் மருத்துவமனை மருத்துவர் தான். இதில் உண்மை நிலை கண்டறியப்பட்டால் அந்த மருத்துவமனையை எடுத்து மூடுவோம் என மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.
இது தமிழகத்தில் மகப்பேறு மருத்துவம் செய்யும் அனைத்து மருத்துவர்களுக்கும் மன உளைச்சலை அளிக்கிறது. தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் கர்ப்பிணி பெண்கள் பிரசவம் முடிந்து தாயும் சேயும் நலமாக வீட்டிற்கு செல்லும் வரை மருத்துவர்கள் படும் கஷ்டம் தங்களுக்கு மட்டுமே தெரியும். ஆனால் அதற்காக மருத்துவரை கை நீட்டுவது நல்ல விஷயம் அல்ல.
தர்மபுரி சம்பவத்திற்கு மருத்துவத் துறை சார்ந்த மூத்த மருத்துவர் கொண்டு விசாரணை நடத்தினால் சரியாக இருக்கும். அவ்வாறு இல்லாமல் தமிழக அரசு நேரடியாக இறங்கி அரசு அதிகாரிகள் மருத்துவர் விசாரணை என்ற பெயரில் தரக்குறைவாக நடத்துவது மருத்துவ சமுதாயத்திற்கு வேதனையாக உள்ளது. தமிழகம் இவ்வாறு கர்ப்பிணி பெண்கள் இறப்பு இல்லாத வகையில் முன்னோடி மாநிலமாக இருப்பதற்கு தனியார் மகப்பேறு மருத்துவர்களும் ஒரு காரணம்
அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்களை போன்று தனியார் மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர்களும் சிறப்பாக பணியாற்றி தமிழகத்திற்கு பெருமை சேர்த்து வருகிறோம். ஆகவே தனியார் மகப்பேறு மருத்துவர் காக்க வேண்டியது மக்களின் கடமை. தற்போதைய கால சூழ்நிலையில் மகப்பேறு மருத்துவம் எடுத்து படிக்க இளம் மருத்துவர்கள் தயங்கக்கூடிய சூழ்நிலை உள்ளது.
மேலும் வீட்டில் நல்ல மார்க் வாங்கிக்கொண்டு மேல் படிப்பில் மகப்பேறு மருத்துவத்தை எடுத்து படிக்காமல் எளிதாக உள்ள ரேடியாலஜி மற்றும் தோல் நோய் மருத்துவம் ஆகியவற்றியே ஏராளமான மருத்துவர்கள் தற்போது நாடி வருகின்றனர். இதனால் வருங்காலத்தில் தமிழகத்தில் கர்ப்பிணி பெண்களுக்கு மகப்பேறு பார்க்கக்கூடிய பெண் மருத்துவர்கள் இல்லாத சூழ்நிலை உருவாகும்.
எந்த நேரத்தில் எந்த நோயாளி சாதாரண உடல் நிலையில் இருந்து அவசர சிகிச்சை நிலைக்கு எப்போது மாறுவார் என்பது தெரியாது. சிலருடைய உடல் தன்மை காரணமாக திடீரென்று பாதிக்கப்பட்டு சூழலை உருவாக்கும். இனிமேல் இவ்வாறு உள்ள கர்ப்பிணிப் பெண்களை மருத்துவமனைகளில் எடுத்துக்கொள்ள கூட முடியாத நிலை ஏற்படும். இதனால் கர்ப்பிணி பெண்களின் மரணம் அதிகரிக்க கூடும். எனவே மருத்துவர்களை கனிவுடன் அரசு கையாண்டால் மருத்துவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகாமல் பணியாற்ற முடியும் என தெரிவித்தனர்.