கள்ளக்குறிச்சி அடுத்த கோமுகி ஆற்றங்கரை நந்தவனம் பகுதியில் கள்ளச்சாராயம் தொடர்ந்து விற்பனை செய்யப்பட்டு வந்திருக்கிறது. இதில் கள்ளக்குறிச்சி நகராட்சிக்குட்பட்ட கருணாபுரம், மாதவச்சேரி பகுதியில் விற்பனை செய்த பாக்கெட் சாராயத்தை சிலர் குடித்திருக்கின்றனர். இந்த கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரம் தமிழ்நாட்டையே உலுக்கி உள்ளது. இதில் பலியானோர் எண்ணிக்கை 49 ஆக உயர்ந்து உள்ளது. இதில் ஏற்கனவே சாராயம் காய்ச்சிய 3 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
அதிர்ச்சி அளித்த மரணம்: கள்ளக்குறிச்சி வட்டத்தில், கருணாபுரம் காலனியைச் சேர்ந்த 50 நபர்கள் வாந்தி, வயிற்றுவலி, வயிற்றெரிச்சல் போன்ற உபாதைகள் இருப்பதாகத் தெரிவித்து கள்ளக்குறிச்சி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். காவல் துறை மற்றும் வருவாய்த் துறையினர் மேற்கொண்ட விசாரணையில், மேற்படி நபர்கள் பாக்கெட் சாராயத்தை அருந்தியிருக்கக்கூடும் என்று சந்தேகிக்கப்படுகிறது.
குழப்பம்: கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராய மரணம் தொடர்பாக மஞ்சள் சேலையில் பேட்டி அளித்த பெண் ஒருவர் இணையத்தில் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளார் .
மஞ்சள் சேலை கட்டிய ஒரு பெண்தான் எல்லா டிவியிலும் பேட்டிக்கொடுத்தார். கேமராவும் வளைத்து வளைத்துஅந்த பெண்ணை காண்பித்தது. முதலில் அண்ணாமலை வந்த போது அவரை கட்டிப்பிடித்து அழுதார். அடுத்து அதிமுக சார்பாக எடப்பாடி வந்த போது அவரை பிடித்து அழுதார்.
அதன்பின் முதலில் நான் பாஜக என்றவர்.. பின்னர் வேறு பேட்டியில் நான் அதிமுக என்றுள்ளார். கடைசியில் வேறு பேட்டியில் அப்படியே மாற்றி நான் திமுக என்றுள்ளார். இப்படி இவர் மாற்றி மாற்றி பேசிய நிலையில்.. இந்த அம்மா வீட்டில் மட்டும் யாரும் சாகவில்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது.
இவரின் பேச்சுக்கள் ஏற்கனவே செட் பண்ணி வைத்தது போல இருப்பதாக நெட்டிசன்கள் விமர்சனம் செய்துள்ளனர். அம்பி, அந்நியன், ரெமோ போல மாறி மாறி பேசுவதாக நெட்டிசன்கள் கூறியுள்ளனர்.
முதல்வர் கலக்கம்: இந்த கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் கூறுகையில், என்னை மிகவும் வேதனைக்குள்ளாக்கியுள்ள கள்ளக்குறிச்சி நிகழ்வு நிகழ்ந்திருக்கக் கூடாத ஒன்று. எடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகள் அத்தனையையும் கண்காணித்து வருகிறேன்.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு உயர்தர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிதியுதவியும் அறிவித்துள்ளேன். மாண்புமிகு அமைச்சர்கள் - உள்துறைச் செயலாளர் - காவல்துறை இயக்குநர் உள்ளிட்டோர் நேரில் சென்று நடவடிக்கைகளைக் கண்காணிக்கின்றனர்.
இனி இதுபோன்ற சம்பவங்கள் தமிழ்நாட்டில் மீண்டும் நடைபெறாமல் இருக்க - மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அரசுக்கு ஆலோசனைகளை வழங்கிட, ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் திரு. பி.கோகுல்தாஸ் அவர்கள் தலைமையில் ஒருநபர் ஆணையம் அமைத்திட உத்தரவிட்டுள்ளேன், என்றுள்ளார்.